சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையின் 200ஆவது ஆண்டு நினைவு வளைவு மற்றும் புதுப்பிக்கப்பட்ட எலியட்ஸ் அருங்காட்சியகத்தை மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜய பாஸ்கர் நேற்று திறந்துவைத்தார். அப்போது, ரூ. 66 கோடியில் எழும்பூர் கண் மருத்துவமனைக்கு கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர், ”எழும்பூர் கண் மருத்துவமனையில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தை, மருத்துவ மாணவர்களின் படிப்புக்கு உதவும் வகையில், மருத்துவர்களுக்கான சுற்றுலா இடமாக மாற்றுவதற்கு விரைவில் அரசாணை பிறப்பிக்கப்படும்.
எழும்பூர் கண் மருத்துவமனை புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் விஜய பாஸ்கர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், 88 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மூன்றாவது அடுக்கு மாடிக் கட்டடத்தை, முதலமைச்சர் விரைவில் திறந்து வைப்பார். அரசின் அழுத்தம் காரணமாகவே, தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் எவ்வித தொய்வும் இல்லாமல் நடைபெறுகிறது.
செங்கல்பட்டில் மருத்துவத் துறைக்கு தேவைப்படும் உபகரணங்களைத் தயாரிக்க, மருத்துவப் பூங்கா அமைக்க வேண்டுமென்பது முதல்வரின் கனவுத் திட்டம். அதற்கான பணிகளும் நடைபெற்றுவருகின்றன. தமிழ்நாட்டில் மருந்துத் தட்டுப்பாடுகள் ஏதுமின்றி போதுமான மருந்துகள் கையிருப்பில் உள்ளது” என்று தெரிவித்தார்.