சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படாததற்கான காரணம் குறித்து பிர்லா பிளானடோரியம் மற்றும் அறிவியல் மையத்தின் இயக்குநர் சித்தார்த் கூறியதாவது:
சந்திரயான் 2 ஏவப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இயந்திரத்தில் எண்ணைய் கசிவு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் விண்ணில் செலுத்தம் திட்டத்தைக் கைவிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இது போன்ற எண்ணெய் கசிவினால், விண்கலம் ஏவுதளத்தில் இருக்கும்போதோ அல்லது விண்ணில் ஏவப்பட்ட பின்போ வெடித்துச் சிதறுவதற்கு வாய்ப்புண்டு. இதுபோன்று இயந்திரக் கோளாறுகள் கடந்த காலத்திலும் நிகழ்ந்துள்ளன. ஆனால், இந்தியாவில் அல்ல. அமெரிக்கா, ரஷ்யா போன்ற வெளிநாடுகளில் நடந்துள்ளது. இது மிகவும் ஆபத்தான ஒன்று என்பதால், இதற்கானக் காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும். இந்த எண்ணெய் கசிவை சரி செய்ய 24 மணி நேரமோ அல்லது 48 மணி நேரமோ, ஏன் சில வாரங்களோ கூட ஆகலாம்.
இதற்கு பிறகு ராக்கெட் ஏவப்படுவதற்கான நேரம் மற்றும் சந்திரன், சூரியன் ஆகியவற்றின் நேர்கோட்டுப்பாதையை கண்டறிந்தபின் மீண்டும் ராக்கெட்டை விண்ணில் செலுத்தவதற்கான தேதி அறிவிக்கப்படும்.
ராக்கெட்டின் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு ஒரு எதிர்பாராத விபத்து. இது போன்ற தொழில்நுட்பக் கோளாறுகள் எங்கு வேண்டுமானாலும் நடைபெற வாய்ப்புள்ளது. கடைசி நிமிடத் தொழில் நுட்பக் கோளாறுகள் ஏற்படுவதும், அதனால் ராக்கெட் விண்ணில் ஏவப்படுவது தடுத்து நிறுத்துவதும் மிகவும் இயல்பான ஒன்று.
உதாரணமாக, கல்பனா சாவ்லாவுக்கு நேர்ந்த சோகம் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. கல்பனா பயணித்த விண்கலத்தின் இறக்கையில் ஏற்பட்ட சிறிய கோளாறு அவர் உள்ளிட்ட அனைவரின் உயிரைப் பறித்தது. எனவே விண்கலத்தை ஏவுவதற்கு முன் அதன் அனைத்து பாகங்களும் 100 சதவிகிதம் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்வது முக்கியமான ஒன்று.
இது போன்று வேறு சில நாடுகளிலும் நடந்துள்ளது. உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமென்றால் சீனா. ஆனால், அங்கு என்ன நடந்தது என்பது நமக்குத் தெரியாது. எனினும், இது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறும் ஒன்று என்பதால் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மிகச் சிறிய சந்தேகம் இருந்தால் கூட ராக்கெட்டை விண்ணில் ஏவுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். இந்தியா ரூ.1000 கோடியில் இந்த சந்திரயான் 2 தயார் செய்துள்ளது. ஒருவேளை வெடித்துச் சிதறியிருந்தால் அனைவரது உழைப்பும், பணமும் வீணாகியிருக்கக் கூடும்.
இது கௌரவத்தை சீர்குலைக்கும் ஒன்று அல்ல. இதுபோன்ற தொழில்நுட்பக் கோளாறுகள் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளிலும் நிகழ்ந்துள்ளன. இது, சந்திரயானில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறினை நாம் சரியான நேரத்தில் கவனித்து தடுத்து நிறுத்தியுள்ளோம் என்ற அபிப்ராயத்தினை உலக நாடுகளுக்கு அளிக்கும், என்றார்.