சென்னை: தமிழ்நாடு இந்து அறநிலையத்துறையின்கீழ் இயங்கும், சென்னை கொளத்தூரில் உள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவிப்பேராசிரியர், உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், காவலர், தூய்மைப்பணியாளர் மற்றும் துப்புரவுப் பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று,
இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சார்பில் அக்டோபர் 10அன்று நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்பட்டது.
சம்பந்தப்பட்ட பணிகளுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், பிற மதத்தினர் யாரும் கலந்து கொள்ளத் தகுதி இல்லை என்ற அறிவிப்பை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த சுஹைல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தன் மனுவில், "தாய் மொழியாக தமிழை கொண்ட தனக்கு, தமிழ்நாடு அரசின் பணிகளில் நியமனம் செய்ய மதம் தடையாக இருக்கக் கூடாது. இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பது இந்திய அரசியல் சட்டப் பிரிவு 16 மற்றும் உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சம்பந்தப்பட்ட அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டுமெனவும், அதனை ரத்து செய்துவிட்டு, எல்லா மதத்தினரும் விண்ணப்பிக்கும் வகையில் புதிதாக அறிவிப்பு வெளியிட இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டுமெனவும் கோரியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:சாலைப்பணிகளில் தொடர்ந்து வெட்டப்படும் 'மாநில மரம்'... பனை மேம்பாட்டு இயக்கத்தை கிடப்பில் போட்ட அரசு?