சென்னை:தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழையால் ஏற்பட்ட மழை வெள்ள சேதங்கள், பாதிப்புகளை ஆய்வுசெய்ய மத்திய உள் துறை அமைச்சக இணைச் செயலர் ராஜீவ் சர்மா தலைமையிலான மத்திய குழு நேற்று (நவம்பர் 21) சென்னை வந்தடைந்தது.
இந்நிலையில், இந்தக் குழு இரு அணிகளாகப் பிரிந்து இன்றும் (நவம்பர் 22), நாளையும் (நவம்பர் 23) ஆய்வுசெய்கிறது. அதன்படி, ராஜீவ் சர்மா தலைமையில் முதல் குழுவினர் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி வழிநடத்த சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தற்போது ஆய்வு செய்துவருகின்றனர்.
ஆய்வின் முதற்பகுதியாக இன்று வடசென்னை பகுதிக்குள்பட்ட புளியந்தோப்பு வீரப்ப செட்டி தெரு, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, அழகப்பா சாலை, கொளத்தூர் தொகுதிக்குள்பட்ட சிவா இளங்கோ சாலைப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, நாளை சாலை மார்க்கமாக புதுச்சேரி சென்று, அதன்பின் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யவுள்ளனர்.
இதேபோல் ஒன்றிய நிதி அமைச்சக ஆலோசகர் ஆர்.பி. கவுல் உள்ளிட்டோர் அடங்கிய இரண்டாவது குழுவினர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலர் குமார் ஜெயந்த் வழிநடத்த சென்னையிலிருந்து புறப்பட்டு கன்னியாகுமரி சென்று அங்கு ஆய்வு மேற்கொள்கின்றனர்.
இரண்டாவது அணியினர் கன்னியாகுமரியில் மேற்கொள்ளும் ஆய்வைத் தொடர்ந்து நாளை வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர். வரும் 24ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் இறையன்பு உள்ளிட்ட உயர் அலுவலர்களுடன் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசித்த பின்னர் மத்திய குழுவினர் டெல்லிக்குத் திரும்பிச் செல்லவுள்ளனர்.
இதையும் படிங்க: Vir Chakra for Abhinandan: வீர் சக்ரா விருதுபெற்றார் போர் வீரர் அபிநந்தன்!