நாட்டின் பொருளாதாரம் கடந்த ஆறு காலாண்டுகளாகத் தொடர்ந்து சரிவடைந்து வரும் நிலையில், மக்கள் கையில் அதிக பணத்தைக் கொடுத்து, நுகர்வை அதிகரித்து அதன் மூலமாக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் எனப் பலரும் கூறுகின்றனர். ஆனால், இந்த பட்ஜெட்டில் இதற்கான எந்தத் திட்டத்தையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை எனப் பொருளாதார நிபுணர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மத்திய அரசோ, தங்கள் அரசு தனிநபர் வருமான வரி விகிதங்களைக் குறைத்துள்ளதாகக் கூறுகிறது. ஆனால், இந்த புதிய வரி விதிப்பு முறையால் யாரும் பயனடையப் போவதில்லை என்பதோடு, மக்களின் சேமிப்பு பழக்கம் குறைந்து அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
புதிய வருமான வரி விதிப்பு முறையில் வரிக்கழிவுகள் ஏதுமில்லாததால் வீட்டுக்கடன் செலுத்துபவர்கள், இன்சூரன்ஸ் ப்ரீமியம் கட்டுபவர்கள் ஆகியோருக்கு இது பலனளிக்காது எனவும் கூறப்படுகிறது. அதே சமயத்தில் நாட்டை சேமிப்பு கலாசாரத்தில் இருந்து, நுகர்வு கலாசாரத்துக்கு மாற்றும் வகையில் புதிய வருமான வரி உள்ளதாக வரித்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.