தமிழகம் முழுவதும் குரூப் 4 பதவிகளுக்கான பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற எழுத்துத் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தேர்வில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து தேர்வாணையம் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கிய சிபிசிஐடி காவல்துறை, முறைகேடு தொடர்பாக அரசு ஊழியர்கள், இடைத்தரகர்கள், தேர்வர்கள் என இதுவரை 12 பேரை கைது செய்துள்ளனர். இதனிடையே, 2017ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்றது தெரியவந்ததையடுத்து, அது தொடர்பாகவும் 10க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்ட காவலர் சித்தாண்டி, இடைத்தரகர் ஜெயக்குமார் ஆகியோரை 7 நாட்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஜெயக்குமாரிடம் நடத்திய விசாரணையில், 4 கோடி ரூபாய்க்கு 23 அரசுப்பணிகளை அவர் விற்றதும், தேர்வர்களிடம் பணம் பெற்று முறைகேட்டிற்கு உதவியவர்களுக்கு ஜெயக்குமார் பங்கிட்டு கொடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், விடைத்தாள்களை திருத்தியது, விடைத்தாள்களை கொண்டு சென்ற வாகனத்தை நிறுத்திய இடம் உள்ளிட்டவைகள் தொடர்பாக நிகழ்விடத்திற்கு ஜெயக்குமார் மற்றும் டி.என்.பி.எஸ்.சி ஊழியர் ஓம் காந்தனை அழைத்துச் சென்ற காவல்துறையினர், முறைகேட்டில் ஈடுபட்டதை நடித்து காண்பிக்க வைத்து, அதனை வீடியோ பதிவும் செய்துள்ளனர்.
இதனிடையே, கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்வில் முறைகேடு செய்து தேர்ச்சி பெற்று தற்போது விஏஓ வாக பணியாற்றிக்கொண்டிருந்த விழுப்புரம் மாவட்டம் அறியூரைச் சேர்ந்த நாராயணன் என்கிற சக்தி என்பரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 2016 ஆம் ஆண்டு நடந்த குரூப் 4 தேர்வில், மேலும் நான்கு பேர் முறைகேடு செய்து தற்போது அதிகாரிகளாக பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது. அவர்களை கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்வு முறைகேடு தொடர்பான கைது எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஏற்கெனவே பிடிபட்ட டி.என்.பி.எஸ்.சி ஊழியர் ஓம் காந்தனிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு உதவிய 3 பேரை இன்று சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் மூவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பதும், தனியார் கார் ஓட்டுநர்களாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: இணையவழி கிரிக்கெட் சூதாட்டம் - தலைமறைவாக இருந்த முக்கிய நபர் கைது