சத்தியநாராயண ரெட்டி என்பவர், காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூரில் 16 ஏக்கருக்கு மட்டுமே பட்டா பெற்றுள்ள நிலையில், அந்த நிலத்தை ஒட்டி உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாகவும், அபகரித்த அரசு நிலத்தை காசா கிராண்டே எனும் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளதாகவும் கூறி; அதே தாழம்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.
சத்தியநாராயண ரெட்டியிடம் இருந்து நிலத்தை வாங்கிய தனியார் கட்டுமான நிறுவனமான காசா கிராண்டே தாங்கள் வாங்கிய நிலத்திற்கு உரிமை கோரியும் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில், தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் நர்மதா சம்பத்,
"முதற்கட்ட விசாரணையில் சத்தியநாராயண ரெட்டி பல்வேறு காலகட்டத்தில் போலியான ஆவணங்கள் மற்றும் அரசு அதிகாரிகள் துணையுடன் அரசுக்குச் சொந்தமான 600 ஏக்கர் நிலத்தை அபகரித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக விசாரணை மேற்கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு சமர்ப்பிக்கும் விசாரணை அறிக்கையின் அடிப்படையில், இந்த குற்றத்திற்கு காரணமானவர்கள், துணை போன அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது" எனக் கூறினார்
அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பொதுநல வழக்குத் தொடர்ந்த ராஜாவின் மனுவை முடித்து வைத்தும், நிலத்திற்கு உரிமை கோரி காசா கிராண்டே நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தும் தீர்ப்பளித்ததுடன், சிறப்பு குழு விசாரணைக்கு தடைவிதிக்கவும் மறுத்து விட்டனர்.
இதையும் பார்க்க :செல்ஃபோன் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் சிசிடிவி காட்சிகள் மூலம் கைது!