சென்னை:இந்து மக்கள் கட்சி மாநிலச் செய்தித் தொடர்பாளர் டி. செந்தில்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார்.
அதில், திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து, இந்து மதத்தினரைப் புண்படுத்தும் வகையில் செயல்பட்டுவருகிறது. இந்து சமய அறநிலையத்துறையும், இந்து மதத்தின் வளர்ச்சிப் பணிகளைச் செய்யாமல் எதிராகச் செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அனைத்துக் கோயில்களும் மூடப்பட்டு, பின்னர் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டு கோயில்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுகின்ற மகா கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு, பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது தவறானது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
பக்தர்களுக்கு அனுமதி வேண்டும்
கரோனா கட்டுப்பாடுகளை நீக்கி வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள், பொழுதுபோக்குக் கூடங்கள், சுற்றுலாத் தலங்கள் உள்ளிட்டவற்றில் அனைவரும் அனுமதிக்கப்படும்போது, கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு பக்தர்களை அனுமதிக்க மறுப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவம், காவல், தீயணைப்பு, மின்சாரம், குடிநீர் போன்ற உரிய ஏற்பாடுகளுடனும், பாதுகாப்பு நடவடிக்கைகளுடனும், கரோனா கட்டுப்பாட்டு விதிகளுடனும், அனைத்து பக்தர்களையும் அனுமதிக்க வேண்டுமென, நவம்பர் 6 அன்று அளித்த மனுவை முறையாகப் பரிசீலித்து முடிவெடுக்க அரசு, மாவட்ட நிர்வாகம், காவல் துறைக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கைவைத்துள்ளார்.
இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி துரைசாமி, நீதிபதி சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.