போக்குவரத்து ஊழியர்கள் பி.எஃப் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2018ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டின் முக்கிய போக்குவரத்து சேவையை அரசு போக்குவரத்து கழகம் வழங்குவதால் இப்போராட்டம் மக்களிடையே கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று காலை ஜூன் மாதத்திற்கான ஊதியத்தில் சரி பாதி தான் வழங்கப்படும் என வந்த தகவலின் பேரில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிகாலை முதல் பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் சிரமத்தைச் சந்திதுள்ளனர்.
வடபழனி, அண்ணாநகர், பெரம்பூர், பூந்தமல்லி, அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள மாநகர பணிமனையில் இருந்து பேருந்துகளை இயக்காமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து ஓட்டுநர் சங்கம் தரப்பில் கேட்டபோது, தங்களுக்கு சம்பளம் அளிக்கப்படும் மாதத்தின் முதல் நாளான இன்று சம்பளத்தில் 60 சதவீதம் மட்டுமே அளிக்கப்படும் என தகவல் வந்ததையடுத்து பெரும்பாலான ஓட்டுநர்கள் வாகனத்தை இயக்க மறுத்து வருவதாகத் தெரிவித்தார்.
போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம் மேலும், இன்று காலை 11 மணியளவில் அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் அளிக்கப்படும் என்ற விவரம் தெரிந்துவிடும். அப்போது, பாதி சம்பளம் வரும்பட்சத்தில் மதியம் முதல் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படாது என தெரிவித்தனர். இதுகுறித்து பேருந்து பணிமனை அலுவலர்களுடன் தொடர்பு கொண்டபோது பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.