சென்னை:கமலாலயத்தில் அண்ணாமலை தலைமையில் பத்மஸ்ரீ விருதுபெற்ற இந்திய முன்னாள் மகளிர் கூடைப்பந்து குழு தலைவி அனிதா பால்துரைக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
மேடையில் அனிதா பால்துரை பேசியபோது, '18 ஆண்டுகள் நாட்டிற்காக விளையாடியுள்ளேன். பேருந்து, ரயிலில் சென்றுவருகிறேன்' என்றார். இதைத் தொடர்ந்து, அவருக்குப் பிடித்த கார் வாங்கிக்கொள்ளுங்கள் என 10 லட்சத்திற்கான காசோலையை அண்ணாமலை வழங்கினார்.
பாராட்டு விழாவைத் தொடர்ந்து செய்தியாளரைச் சந்தித்த அண்ணாமலை, "பாஜக சார்பில் பெட்ரோல் - டீசல் விலை உயர்வை எதிர்த்துப் போராட்டம் நடத்தப்படவில்லை. மத்திய அரசு விலையைக் குறைத்தும்கூட, தேர்தல் அறிக்கையில் சொன்னதைக் குறைக்காமல் இருக்கும் திமுக அரசைக் கண்டித்துதான் பாஜக போராட்டம் நடத்துகிறோம்" என்றார்.
பொருளாதார மேதை ப. சிதம்பரம் பெட்ரோல் - டீசல் விலை குறித்துப் பேச எந்த ஒரு அதிகாரமும், அருகதையும் அற்றவர் என்று குற்றஞ்சாட்டியதோடு, பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வில் இருந்தாலும், அரசு வருமானத்தை இழந்தாலும் பொதுமக்கள் நலனுக்காக மத்திய அரசு பெட்ரோல் - டீசல் விலையை குறைத்துள்ளது என்று கூறினார்.
திமுக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்ட 500 திட்டங்களில் 200 திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம் என்பதை வெள்ளை அறிக்கையாக முதலமைச்சர் வெளியிட வேண்டும் என வலியுறுத்திய அண்ணாமலை, திமுக ஒரே குடும்பமாக ஒரே கம்பெனியாக ஆட்சி நடத்திவருவதாகச் சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக சொல்வது வேறு; செய்வது வேறாக உள்ளது என்றார். பொருளாதாரம் புரியாமல் ஆட்சி நடத்திவருகிறது திமுக என்று விளாசும் அண்ணாமலை, பொருளாதாரத்தில் கடந்த ஏழு ஆண்டுகளில் சிறந்த ஆட்சியை பாஜக அளித்துள்ளதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.