தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'ஒன்றிய அரசு vs மத்திய அரசு; தேவைப்பட்டால் வழக்கு' - பாஜக - Tamil news

ஒன்றிய அரசு என மத்திய அரசை அழைப்பது குறித்து தேவைப்பட்டால் பாஜக சார்பில் வழக்குத் தொடுப்போம் எனத் தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் தெரிவித்துள்ளார்.

கரு.நாகராஜன்
கரு.நாகராஜன்

By

Published : Jun 26, 2021, 7:05 AM IST

சென்னை: தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் பாஜகவின் மாநில செயற்குழுக் கூட்டம் நேற்று (ஜூன் 25) நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பின் மாநிலப் பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, “தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்போது தேர்தலில் போட்டியிடுவது குறித்து செயற்குழுவில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மத்தியில் எல்லா கட்சி கூட்டணியிலும் ஆட்சியில் இருந்த திமுக, இப்போது ஏதோ புதிதாகக் கண்டுபிடித்ததுபோல் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சொல்கிறார்கள்.

ஒன்றிய அரசு என்று சொல்வதால் தமிழ்நாடு அரசுக்கு ஏதேனும் நன்மை இருக்கிறதா, பெருமை இருக்கிறதா, ஒன்றிய அரசு என்பது மக்களைத் திசை திருப்பும் முயற்சி.

மத்திய நிதியமைச்சர் குழப்பமான ஒரு அமைச்சராக இருக்கிறார். கற்பனையில் பேசிவருகிறார். பெட்ரோல் மீதான வரியில் 32.90 ரூபாயை மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது என்று அப்பட்டமான ஒரு பொய்யை நிதியமைச்சர் கூறுகிறார்.

பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுவருகிறது. பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றினால் அதனைத் தமிழ்நாடு பாஜக ஆதரிக்கும்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற சட்டம் ஏற்கனவே இருக்கிறது. இப்போது ஏதோ புதிதாக கொண்டுவருவதுபோல் திமுக செயல்படுகிறது.

எல்லா சமுதாயத்திலும் அவர்கள் வழிபாடு நடத்தும் இடத்தில் உள்ள கோயில்களில் அதே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான் அர்ச்சகராக இருக்கிறார்கள். ஒன்றிய அரசு எனத் தமிழ்நாடு அரசு அழைப்பது குறித்து பாஜக சார்பில் தேவைப்பட்டால் வழக்குத் தொடுப்போம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கூம்பு வடிவ ஒலி பெருக்கியைப் பயன்படுத்த தடை

ABOUT THE AUTHOR

...view details