தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது மீண்டும் பாயும் குண்டர் சட்டம் - கல்யாணராமன்

கல்யாணராமன், kalyanaraman
கல்யாணராமன்

By

Published : Oct 26, 2021, 5:54 PM IST

Updated : Oct 26, 2021, 6:38 PM IST

17:50 October 26

சமூக வலைதளங்களில் சர்ச்சையான கருத்துகளை பதிவிட்டதாக பாஜக பிரமுகர் கல்யாணராமன் கைதுசெய்யப்பட்ட நிலையில், அவர் மீது மீண்டும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை:நீதிமன்ற பிரமாணப் பத்திரத்தை மீறி, இரு மதத்தினருக்கிடையே பிரச்னை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துக்களைப் பதிவிட்ட பாஜக பிரமுகர் கல்யாணராமனை கடந்த அக். 17ஆம் தேதி நள்ளிரவில் மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் கைதுசெய்தனர்.

கல்யாணராமன் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை, தனது சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் பதிவிட்டு வந்த நிலையில், அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளன.

பிப்ரவரி மாதம் குண்டாஸில் கைது

முக்கியத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் பற்றி அவதூறு பரப்பும் வகையிலும், மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும் கருத்துகளைப் பதிவிட்டதால், சென்னை சிட்லப்பாக்கத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து 2017, 2018ஆம் ஆண்டுகளில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவலர்கள் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

முன்னதாக ஜனவரி, 2021ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மேட்டுப்பாளையத்திலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவதூறாகப் பேசி பொதுமக்களின் அமைதியைக் குலைக்கும் வகையில் கருத்துகளை கல்யாணராமன் பதிவிட்டு வந்ததால், பிப்ரவரி மாதம் 2021ஆம் ஆண்டில் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார்.

பிணைப்பத்திரம்

இதையடுத்து, தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் கல்யாணராமன் வழக்குத் தொடர்ந்தார். பின்னர் அவர் மீதான குண்டர் சட்டமும் ரத்தானது.

அதன் பிறகு ஜாமின் மனு தாக்கல் செய்யும்போது 'மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் கருத்துப் பதிவிட மாட்டேன்’ என நீதிமன்றத்தில் பிணைப்பத்திரம் எழுதிக்கொடுத்துள்ளார்.

அதனடிப்படையில் பிணையில் வெளிவந்த பிறகும் அரசியல் தலைவர்களையும், அவர்களின் குடும்பத்தைப் பற்றியும் அவதூறாக கருத்துப் பதிவிட்டு வந்ததாலும், பிராமணப் பத்திரத்தை மீறி இரு மதத்தினருக்கு இடையே பிரச்சினை ஏற்படுத்தும் வகையில் சமூக வளைதளப் பக்கத்தில் தொடர்ந்து கருத்து பதிவிட்டதாலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கோபிநாத் என்பவர், சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

விசிகவின் தொடர் புகார்கள்

முன்னதாக கடந்த ஜூலை மாதம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனைப் பற்றி அவதூறாக கருத்து பதிவிட்டதன் அடிப்படையில், அதன் பொதுச்செயலாளர் வன்னியரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். 

இதனையடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், கோபிநாத் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை சைபர் கிரைம் பிரிவு காவலர்கள் இரண்டு பிரிவுகளின்கீழ் கல்யாணராமன் மீது வழக்குப்பதிவு செய்து அக்.17ஆம் தேதி இரவு அவரது வீட்டில் அதிரடியாகக் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

டவிட்டர் பக்கத்தை முடக்க பரிந்துரை

அதேபோல் கல்யாணராமனின் ட்விட்டர் பக்கத்தை நிரந்தரமாக முடக்கவும் காவல் துறைத் தரப்பில் பரிந்துரைக்கப்பட்டது. கல்யாணராமன் அவதூறாகப் பதிவிட்ட ட்விட்டர் கருத்துகளை அழித்துவிட்டு, அவரது ட்விட்டர் பக்கத்தை முடக்குவதற்கு சென்னை மத்தியக் குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவு, ட்விட்டர் நிறுவனத்துக்கு பரிந்துரை செய்தது.

இதன் பின்னர், கல்யாணராமன் தரப்பில் தாக்கல் செய்யப்ட்ட பிணை மனுவை, சென்னை ஜார்ஜ் டவுண் நீதிமன்றம் கடந்த அக்.21ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், கல்யாணராமன் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முன்னதாக உத்தரவிட்டுள்ளார். 

இதையும் படிங்க: கல்யாணராமன் கைது; விளைவுகள் வேறுமாதிரி இருக்கும் - எச்சரித்த அண்ணாமலை

Last Updated : Oct 26, 2021, 6:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details