தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இட ஒதுக்கீடு விவகாரம்... பல குரலில் பேசும் பாஜக!

சென்னை: 7.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில் பாஜக தலைவர்கள் பலரும் முரண்பட்ட கருத்துகளைக் கூறி வருவது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

bjp
bjp

By

Published : Oct 26, 2020, 6:13 PM IST

மருத்துவப்படிப்புகளில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மசோதாவுக்கு இதுவரை ஒப்புதல் வழங்காததால், மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இவ்விவகாரம் தமிழ்நாடு அரசியலில் மிக முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

இதற்கு உடனடியாக ஒப்புதல் வழங்கக்கோரி, முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் குழு தனித்தனியே ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து வலியுறுத்தியது. திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டமும் நடத்தப்பட்டது. இதையடுத்து இவ்விவகாரத்தில் முடிவெடுக்க 3 அல்லது 4 வாரம் அவகாசம் வேண்டுமென ஸ்டாலினுக்கு எழுதிய பதில் கடிதத்தில் ஆளுநர் தெரிவித்திருந்தார்.

உள்ஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும்; எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வந்தாலும், உள் ஒதுக்கீடு வேண்டும் என்பதில் ஒத்த கருத்துடன் உறுதியாகவே உள்ளனர். அனைத்துக் கட்சிகளும் இவ்வாறே கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில், பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடு பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஆளுநர் காலம் தாழ்த்தாமல் மசோதாவை அனுமதிக்க வேண்டும் - எல்.முருகன்

மாநில பாஜக தலைவர் எல்.முருகன், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை வரவேற்பதாகவும், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தனது நடவடிக்கையைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். மேலும், ஆளுநர் காலம் தாழ்த்தாமல் இம்மசோதாவிற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அவர் இரண்டு முறை இவ்வாறு சட்ட மசோதாவுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

ஆனால், அக்கட்சியின் மூத்தத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் மற்றும் அண்மையில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பூ ஆகியோர், ஆளுநர் இவ்விஷயத்தில் காலம் தாழ்த்துவது ஒன்றும் பெரிய விஷயமல்ல என்ற வகையில் கருத்து தெரிவித்துள்ளனர்.

’கால தாமதம் ஒன்றும் பெரிய விஷயமல்ல’

இன்னும் ஒருபடி மேலே போய், பாஜகவின் கல்விப் பிரிவு மாநிலச் செயலாளரும், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க பொதுச் செயலாளருமான கே.ஆர்.நந்தகுமார், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அரசுப் பள்ளி மட்டுமல்லாது அனைத்து மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படும் இந்த நீட் தேர்வே வேண்டாம் என்பதே கல்வியாளர்கள், அரசியல் இயக்கங்கள் உள்ளிட்டோரின் கருத்தாக உள்ளது. இருப்பினும், இடைக்காலமாக உள்ஒதுக்கீடு என்பதை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதிலும் பாஜக தலைவர்கள் ஆளுக்கொரு கருத்துச் சொல்வது பொதுமக்கள் மட்டுமல்லாது அக்கட்சியினர் மத்தியிலேயே பெரும் குழப்பதை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: "7.5% இட ஒதுக்கீடு தீர்மானத்தை நீர்த்துப்போக வைக்கிறார் ஆளுநர் " - மு.க.ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details