சென்னை: அண்மையில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா, இஸ்லாமியர்களின் இறைதூதரான நபிகள் நாயகம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்நிலையில் இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், 'பாஜகவின் தேசிய பொறுப்பாளர்கள் தொலைக்காட்சி விவாதத்திலும், சமூக வலைதளத்திலும் நபிகள் நாயகமான முகமது நபி அவர்களை அவமதித்ததால் அரபு நாடுகள் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு உலக அரங்கில் மிகப்பெரிய தலைகுனிவு ஏற்பட்டிருக்கிறது.
பாஜகவின் தேசிய செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா என்பவர் ’டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சி விவாதத்தில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திப் பேசினார். இன்னொரு நிர்வாகியான நவீன் ஜிண்டால் என்பவர் சமூகவலைதளத்தில் ’நபி பெருமானை’ இழிவுபடுத்திப் பதிவு செய்தார். இதனால் அரபு நாடுகள் முழுவதும் மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்துள்ளது. சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில், ’இந்திய பொருட்களைப் புறக்கணிப்போம்’ என்ற முழக்கம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்தியாவுக்கு எதிராக வலுக்கும் கண்டனக்குரல்:கடைகளிலிருந்து இந்தியப்பொருட்கள் அகற்றப்பட்டு இருக்கின்றன. கத்தார் அரசு இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்களுக்கு அளிக்க இருந்த விருந்தை ரத்து செய்துள்ளது. குவைத், கத்தார், ஈரான் ஆகிய நாடுகள் இந்தியத் தூதரை நேரில் அழைத்துத் தமது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன. பாகிஸ்தான் பிரதமர், முன்னாள் பிரதமர் ஆகியோர் இந்தியாவுக்குத் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். இதனால் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பும், உலக அரங்கில் சகிப்புத்தன்மை அற்ற நாடு என்ற அவப்பெயரும், தலைகுனிவும் இந்திய அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.