அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டாலும், அதன் கூட்டணிக் கட்சியான பாஜக தலைவர்கள் பலர், முதலமைச்சர் வேட்பாளரை கூட்டணி தலைமைதான் முடிவு செய்யும் என தெரிவித்து வருகின்றனர். இதனால் இரு கட்சிகளின் நிர்வாகிகள் இடையே கடும் வார்த்தைப்போர் நடந்து வருகிறது.
இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் நேரில் சந்தித்தார். அப்போது, தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்து 50 லட்சம் மக்களின் கையெழுத்து அடங்கிய மனுவை முதலமைச்சரிடம் அவர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முருகன், அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்றும், தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்து 50 லட்சம் மக்களிடம் வாங்கிய கையெழுத்தை முதலமைச்சரிடம் வழங்கியதாகவும் தெரிவித்தார். மேலும், இக்கொள்கைக்கு ஆதரவு தெரிவித்த கல்வியாளர்கள் 2 லட்சம் பேரின் கையெழுத்தை, இன்னொரு நாள் வந்து முதலமைச்சரிடம் வழங்க உள்ளதாகவும் முருகன் தெரிவித்தார்.
நேற்று ராயப்பேட்டையில் நடந்த அதிமுகவின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்ட தொடக்க விழாவில் பேசிய, அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, தேசிய கட்சிகள் தமிழகத்தில் நுழைய முடியாது என்றும், தமிழகத்தில் கூட்டணி மந்திரிசபை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், இதை நினைத்துக் கொண்டு யாரும் வரவேண்டாம் என தேசிய மற்றும் கூட்டணிக் கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த சூழலில், முதலமைச்சரை முருகன் சந்தித்திருப்பது அரசியல் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:'அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி தான்' - விந்தியா பேட்டி