சென்னை: தமிழகம் முழுவதும் சுமார் 800 திரையரங்குகளில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜாஃபர்கான் பேட்டையில் உள்ள காசி டாக்கீஸ் திரையரங்கில், பீஸ்ட் பட டிக்கெட்டுகள் பிளாக்கில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக எம்ஜிஆர் நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அங்கு சென்ற போலீசார், தியேட்டர் வாசலில் பீஸ்ட் பட டிக்கெட்டை அதிக விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 134 டிக்கெட்டுக்கள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த வேல்முருகன் (37) என்பதும், இவர் விஜய் மக்கள் இயக்கத்தில் விருகை பகுதி தலைவராக இருப்பதும் தெரியவந்தது.