தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உணவின்றி தவிக்கும் வெளி மாநிலத் தொழிலாளர்கள் - உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

சென்னை: ஊரடங்கு காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளை வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

highcourt
highcourt

By

Published : Apr 28, 2020, 1:24 PM IST

இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிர்வாதம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் மாவட்டத்தில் கார் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் சிப்காட் தொழிற்சாலையில் ராஜஸ்தான், பிகார், சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வாங்காளத்தைச் சேர்ந்த 1600 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

கடந்த 30 நாட்களுக்கும் மேலாக தொடரும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு, உணவு மற்றும் ஊதியத்தை சம்பந்தப்பட்ட நிறுவனம் வழங்கவில்லை. யமஹா நிறுவனமும் அவர்கள் தங்கள் நிறுவன ஊழியர்கள் இல்லை எனத் தெரிவித்துவிட்டது.

ஊழியர்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு உண்டும், இதர மாநிலங்களில் உள்ள உறவினர்களிடம் பணம் பெற்றும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர். அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 12,000 முதல் 15,000 வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு எந்த உதவிகளும் கிடைக்கவில்லை.

பேரிடர் நிவாரண நிதியாக பல கோடி ரூபாயை மத்திய-மாநில அரசுகளுக்கு வழங்கும் தனியார் நிறுவனங்கள், தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு எதுவும் செய்யவில்லை. அதனால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட சமையல் பொருட்களையும், நிறுவனத்திடம் இருந்து நிலுவை ஊதியத்தையும் பெற்றுத்தரவும், வீட்டு வாடகைக்கான கால அவகாசம் வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த பணிகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் மேற்பார்வையில் செயல்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இதையும் படிங்க: 'பள்ளிவாசல்களுக்கு இலவசமாக அரிசி வழங்கும் அரசாணைக்கு எதிரான வழக்கு' - உயர் நீதிமன்றம் நிராகரிப்பு

ABOUT THE AUTHOR

...view details