வங்கித்துறையை நலிவிலிருந்து மீட்கும் வகையிலும், வாராக்கடன் சுமையை சமாளிக்கும் வகையிலும், ஐடிபிஐ வங்கி, 2 பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஒரு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனம் தனியார் மயமாக்கப்படும் என்றும், அதேபோல், எல்ஐசி பங்குகள் விற்பனை செய்யப்படும் என்றும், பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதற்கு வங்கி ஊழியர்கள் சங்கம், இடதுசாரி அமைப்புகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பொதுத்துறை வங்கிகளே நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவின என்றும், தனியார் வங்கிகள் தங்களது சொத்துகளை அதிகரிக்க மட்டுமே பொதுமக்களின் சேமிப்புப் பணத்தை பயன்படுத்தியதாகவும் வங்கி ஊழியர்கள் சங்கம் குற்றஞ்சாட்டுகின்றன. இதற்காக போராட்டம் நடத்திய பின்பே, கடந்த 1969 ஆம் ஆண்டு வங்கிகள் பொதுத்துறையாக்கப்பட்டு, ஊரக பகுதிகளிலும், கிராமங்களிலும் வங்கிக் கிளைகள் நிறுவப்பட்டு, சாதாரண மக்களின் வளர்ச்சிக்காக கடன் கொடுக்கப்பட்டுள்ளதாக வங்கி ஊழியர்கள் வாதிடுகின்றனர். குறிப்பாக விவசாயம், சிறு வேலைவாய்ப்பு உருவாக்கம், வறுமை ஒழிப்பு, ஊரக வளர்ச்சி, சுகாதாரம், கல்வி போன்றவற்றுக்கு கடனுதவி வழங்கின என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
மேலும், வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதால் அரசு வேலைவாய்ப்பு இளைஞர்களுக்கு பறிபோவதோடு, இட ஒதுக்கீடும் பின்பற்றப்படாது என வங்கி ஊழியர் சங்கத்தினர் எச்சரிக்கின்றனர்.