தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் உடல்நலம் குறித்த பொதுமக்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாதம் இருமுறை நடைபெற்றுவருகிறது. இந்த மாதத்திற்கான கலந்துரையாடல் நிகழ்வாக கல்லீரல் அழற்சி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இரைப்பை-குடல் நோய் சிகிச்சைத் துறை தலைவர் மருத்துவர் ராதிகா வேணுகோபால் கலந்துகொண்டு கல்லீரல் நலன் குறித்து மக்களிடையே தெளிவாக எடுத்துரைத்தார். மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்டோரின் சந்தேகங்களுக்கும் பதிலளித்தார்.
இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவர் ராதிகா வேணுகோபால், "கிருமியினால் வரக்கூடிய கல்லீரல் அழற்சி நோயை நாம் பொதுவாக மஞ்சள் காமாலை எனக் கூறுகிறோம். கல்லீரல் அழற்சி நோய்க் கிருமிகள் ரத்தத்தின் மூலமாகவோ, மண உறவைத் தாண்டிய உறவுகளாலும் பரவக்கூடியது. ஆனால் நாட்கள் கடந்த பின்னர் கல்லீரல் கெட்டுப்போய் கல்லீரல் அழற்சி ஏற்படும்.
இந்நோயிலிருந்து பாதுகாக்க முக்கியமாக மூன்று தடுப்பூசிகள் போட வேண்டும்; அவற்றை முறையே முதல் மூன்று மாதங்கள் தொடர்ந்து போட வேண்டும். குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி போட வேண்டும். அதேபோல், குழந்தை பிறந்த 24 மணி நேரத்திற்குள் ஹெப்படைடிஸ் ’பி’ தடுப்பூசி போட்டுவிட்டால் வாழ்நாள் முழுவதும் கல்லீரல் அழற்சி நோய் வராமல் தடுக்கலாம்.
உடலுறவின்போது ஏற்படும் ரத்தக் கசிவால் கல்லீரல் அழற்சி நோய் தாக்கும் மேலும், கல்லீரல் அழற்சி நோய்க்கான கிருமிகள் ஒருவர் பயன்படுத்திய பிளேடு, ரேஷர், ஊசி போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலமும் எளிதாகப் பரவும். அதேபோல், உடலுறவின்போது ஏற்படக்கூடிய ரத்தக் கசிவினால் கல்லீரல் அழற்சி நோய்க்கான கிருமி எளிதில் தாக்கும்" என எச்சரிக்கைவிடுத்தார்.