தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஏடிஎம்மில் திருட முயற்சி; ஸ்கிம்மர் கருவியை கைப்பற்றிய காவல் துறை! - அயனாவரம் போலிஸ்

சென்னை: அயனாவரம் பகுதியில் ஏடிஎம் மெஷின் ஒன்றில், பொருத்தப்பட்ட ஸ்கிம்மர் கருவி கண்டறியப்பட்டு, கொள்ளை முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

attempt of atm theft

By

Published : Jul 17, 2019, 7:56 PM IST

சென்னை அயனாவரம் கான்ஸ்டபிள் சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் கிளையில் நேற்று இரவு அதே பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் கீபேட் மேலே சிறிய அளவிலான கேமரா போன்று ஒன்று அவருக்கு தெரிந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் காவல் துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

தகவல் அறிந்த அயனாவரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஏடிஎம் மெஷினை சோதனை செய்தனர். அப்போது மெஷினில் பொருத்தப்பட்டிருந்த ஸ்கிம்மர் கருவியும், கீபேட்டில் சிறிய ரகசிய கேமராவையும் கண்டுபிடித்து கைப்பற்றினார்கள்.

இதனையடுத்து வங்கி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவர்கள் நேரில் வந்து ஆய்வு நடத்தினார்கள். மேலும் சென்னையில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் குறித்த விவரங்கள் மத்திய குற்றப்பிரிவு காவலர்களிடம் இருப்பதால், அவர்களும் இந்த வழக்கில் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தப்பட்ட ஸ்கிம்மர் கருவியை எடுக்கும்போது

ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டது உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டதால் ஏடிஎம்மில் இருந்த 12 லட்சம் ரூபாய் பணம் தப்பியது. மேலும் முதற்கட்ட விசாரணையில் நேற்று முன்தினம் மாலை ஏடிஎம்மில் பணம் நிரப்பப்பட்டப்போது ஸ்கிம்மர் கருவி இல்லை எனவும், நேற்று இரவு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதால், நேற்று முன்தினம் மாலையிலிருந்து நேற்று மாலை வரை ஏடிஎம்க்குள் யாரெல்லாம் வந்தார்கள், சந்தேகிக்கும்படியாக நபர்கள் இருக்கிறார்களா என்பது குறித்தும் ஏடிஎம்மில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் காவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் ஸ்கிம்மர் கருவி மூலம் இதுவரை பதிவான ஏடிஎம் அட்டைகளின் விவரங்கள் என்னென்ன, எத்தனை பேருடைய விவரங்கள் அதில் உள்ளது, என்பதைத் தெரிந்துகொள்ள மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் ஸ்கிம்மர் கருவியை தொழில்நுட்ப ரீதியில் ஆய்வு செய்துவருகின்றனர்.

பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் கிளை

ABOUT THE AUTHOR

...view details