சென்னை:வரும் 26ஆம் தேதி வரையில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கால்நடை மருத்துவப் படிப்புகள் 12ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. ஆன்லைன் பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே 1500-க்கும் அதிகமான மாணவர்கள் பதிவு செய்தனர். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தால், கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு (பிவிஎஸ்ஸி ஏஎச்) 4 ஆண்டு 6 மாதம் படிப்பும், 1 ஆண்டு உள்ளிருப்புப்பயிற்சியும் வழங்கப்படும். இதில் 580 இடங்கள் உள்ளன.
சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரியில் 120 இடங்கள், நாமக்கல், திருநெல்வேலி, தஞ்சாவூர் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் தலா 100 இடங்கள், சேலம் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தலைவாசல் கூட்டுரோடு ஆகியவற்றில் 80 இடங்கள், தேனி, உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தலா 40 இடங்களில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.