சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 18ஆம் தேதி தொடங்கியது. நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனும், வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோரும் தாக்கல் செய்தனர். இதையடுத்த, இந்த இரு பட்ஜெட்கள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நேற்று (மார்ச் 21) தொடங்கியது.
இந்நிலையில், சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 22) திமுக அவை முன்னவர் துரைமுருகன், 'நீங்கள் செய்தீர்களா' என நீங்கள் கேட்க, 'நீங்கள் செய்தீர்களா' என்று நாங்கள் கேட்க, வெளியிலிருந்து பார்ப்பவர்கள் ரெண்டு பேருமே செய்யவில்லையோ என யோசிப்பார்கள் என்று சொன்னதால் அவையில் சிரிப்பலை நிலவியது.
தொடர்ந்து பேசிய துரைமுருகன்: "தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டீர்களா எனக் கேட்கிறீர்கள். இந்த அவையிலேயே 110 விதியின்கீழ் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படித்ததை எல்லாம் நீங்கள் செய்தீர்களா என, நாங்கள் திருப்பிக் கேட்டால் உங்களால் (அசோக்குமார், அதிமுக உறுப்பினர்) பதிலளிக்க முடியாது"
எதிர்க்கட்சிக் கொறடா எஸ்.பி. வேலுமணி: "புள்ளி விவரமாக என்னென்ன செய்தோம் என்பதை சொல்லி இருக்கின்றோம்"
துரைமுருகன்: "வெளியே கொடுத்த வாக்குறுதியை கேட்டீர்களே?, இங்கு 110 விதியில் கொடுக்கும் வாக்குறுதி, அதை செய்யவில்லையென்றால் 'Breach of Trust'. அந்த வாக்குறுதியை நாளை விவாதம் வைத்துக் கொள்ளலாமா, எத்தனை நிறைவேற்றினீர்கள் என விவாதிக்கலாம்?"
கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி: "2016 தேர்தலில் தமிழ்நாட்டில் படித்த 50 ஆயிரம் இளைஞர்களுக்கு 'Youth Brigade' என்ற திட்டத்தின் அடிப்படையில் பணி அமர்த்தப்படுவார்கள் என்று கூறினார்கள், அந்தப் பட்டியலை கொடுங்கள்"