தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் 71.79 சதவீத வாக்குப்பதிவு! - சட்டப்பேரவை தேர்தல்

தமிழ்நாட்டில் மாலை 7 மணி நேர நிலவரப்படி 71.79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

Voting details in Tamil Nadu as of 7 p.m.  Assembly Election 2021  Tamil Nadu  வாக்குகள்  தமிழ்நாடு  சட்டப்பேரவை தேர்தல்  வாக்குப்பதிவு
Voting details in Tamil Nadu as of 7 p.m. Assembly Election 2021 Tamil Nadu வாக்குகள் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு

By

Published : Apr 6, 2021, 8:20 PM IST

சென்னை:தமிழ்நாட்டின் 16ஆவது சட்டப்பேரவைக்கான தேர்தலில் வாக்குப்பதிவு இன்று (ஏப்.6) நடந்தது. வழக்கம்போல் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நீடித்தது.

இதற்கிடையில் கரோனா நெருக்கடி காலம் என்பதால் கரோனா பாதிப்பாளர்கள் வாக்களிக்கும் பொருட்டு மாலை 6 மணியிலிருந்து 7 மணி வரை ஒரு மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டது. சில இடங்களில் மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று வாக்குப்பதிவு செய்ததை பார்க்க முடிந்தது. பெரிதளவில் எந்த அசம்பாவித சம்பவங்களும் ஏற்படவில்லை. தேர்தல் அமைதியான முறையில் நிறைவுற்றது.

வாக்குப்பதிவு தொடங்கியதும் காலை முதலே அரசியல் தலைவர்களும் திரை பிரபலங்களும் பொதுமக்களுடன் மக்களாக வாக்களித்தனர். எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் உள்ள சிலுவம்பாளையம் அருகேயுள்ள நெடுங்குளத்தில் குடும்பத்தினருடன் நடந்தே வந்து தனது வாக்கை செலுத்தினார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கத்திலும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் ஆழ்வார்பேட்டையிலும் வாக்கு செலுத்தினர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், நாசர் மற்றும் சத்தியராஜ் உள்ளிட்ட பல்வேறு திரை நட்சத்திரங்களும் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக வாக்களிக்கவில்லை. முன்னதாக, நடிகர் அஜித் குமார் தனது குடும்பத்தினருடன் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பே வாக்குச்சாவடிக்கு வந்து காத்திருந்து வாக்களித்தார். நடிகர் விஜய், சைக்கிளில் வந்து வாக்களித்தார். இந்நிலையில் ரசிகர் அவரை காண கூடியதால் பைக்கில் ஏறி வீட்டுக்குச் சென்றார்.

மாலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவுற்றதும் அலுவலர்கள் வாக்கு இயந்திரத்தை சீல் வைத்தனர். தேர்தலில் பதிவான வாக்குகள் மே2ஆம் தேதி எண்ணப்படுகின்றன. அன்றைய தினம் மதியத்துக்குள் முடிவுகள் தெரியவரும். இந்நிலையில் தமிழ்நாட்டில் 71.79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் அதிகப்பட்சமாக கள்ளக்குறிச்சியில் 78 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. கடந்த முறையை போலவே இம்முறையும் சென்னையில் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்தத் தகவல்களை தமிழ்நாடு தேர்தல் அலுவலர் சத்ய பிரத சாகு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “இரவு 12 மணிக்கு முழு விவரம் தெரியும்” என்றார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை வாக்குப்பதிவு குறித்த உடனுக்குடன் தகவல்கள் மற்றும் புகைப்படங்களை காண இங்கே சொடுக்கவும்.

  1. தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
  2. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்- உடனுக்குடன்
  3. சட்டப்பேரவை தேர்தல்: தமிழ்நாட்டில் 13.8 சதவீத வாக்குகள் பதிவு!

ABOUT THE AUTHOR

...view details