சென்னை:சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் சில்வியா(50). இவர், துரைப்பாக்கத்தில் உள்ள தன்னுடைய மகளைப் பார்ப்பதற்காக முகப்பேரில் இருந்து காரை ஓட்டிவந்துள்ளார். சரியாக நண்பகல் 12.30 மணியளவில் அரும்பாக்கம் ஜவஹர்லால் தெரு அருகே பிரபல நட்சத்திர ஹோட்டல் எதிர்புறம் வந்துகொண்டிருந்தபோது, காரின் முன்புறத்தில் இருந்து புகை வந்ததால், அதிர்ச்சியடைந்த சில்வியா, உடனடியாக காரை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கியுள்ளார்.
இதைத்தொடர்ந்து சிறிது நேரத்திலேயே கார் மளமளவென தீப்பற்றி எரியத்தொடங்கியது. கார் முழுவதும் தீ பற்றி எரிந்த நிலையில், இதுகுறித்த தகவல் கிடைத்த கோயம்பேடு தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து 10 நிமிடத்தில் தீயை அணைத்தனர். நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் எவ்விதமான சேதமும் ஏற்படவில்லை. இச்சம்பவம் தொடர்பாக சூளைமேடு காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.