குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், திருப்பூரில் இஸ்லாமிய அமைப்புகள் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் நடத்தும் போராட்டத்தைத் தடுக்கக் கோரி வழக்குரைஞர் கோபிநாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்தப் போராட்டம் காரணமாக பள்ளிக்குழந்தைகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுவில் அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர், திருப்பூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் அனுமதியின்றி போராட்டங்கள் நடத்தியதாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பின்னர் நீதிபதிகளின் கேள்விக்கு பதிலளித்த அரசுத்தரப்பு வழக்குரைஞர், வழக்குப்பதிவு செய்த பின்னும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.
இதையடுத்து, அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களை அப்புறப்படுத்தாதது ஏன் எனவும், காவல்துறையைத் தடுப்பது என்ன எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அனுமதியின்றி போராட்டம் நடத்தியவர்களை உடனே கைது செய்யுமாறு உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: சபரிமலை வாதம் முடிந்ததும், சிஏஏ மனு விசாரணை