அரசு வேலை வாங்கித் தருவதாக 3.28 கோடி ரூபாய் மோசடிசெய்த வழக்கில் அண்ணா பல்கலைக்கழகத் துணைப் பதிவாளர் பார்த்தசாரதியை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் 2019ஆம் ஆண்டு கொடுத்த புகாரில், சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த விஸ்வேஸ்வரன் என்பவரும் அவரின் தந்தை பார்த்தசாரதியும் சேர்ந்து மின்வாரியம், பொதுப்பணித் துறை, ஆசிரியர் நியமனம் எனப் பல அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியதை நம்பி 85 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு மோசடி செய்துவிட்டதாகப் புகார் அளித்திருந்தார்.
இதேபோல சுமார் 25 நபர்களுக்கு அரசு அலுவலகங்களில் பி.ஆர்.ஓ. வேலை, மின் வாரியத்தில் உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர் எனப் பல வேலைகள் வாங்கித் தருவதாக மொத்தம் 3.28 கோடி ரூபாய் மோசடி செய்ததாகப் புகார் பதிவானது.
இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத் துணைப் பதிவாளர் பார்த்தசாரதி, அவரது மகன் விஸ்வேஸ்வர் உள்பட ஒன்பது பேர் மீது வழக்குப்பதிவு செய்த சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர் 2019ஆம் ஆண்டு ஆறுமுகம், ராஜீ, ராஜபாண்டி, விஸ்வேஸ்வர் (அண்ணா பல்கலைக்கழகத் துணைப் பதிவாளர் பார்த்தசாரதியின் மகன்) ஆகிய நான்கு பேரை கைதுசெய்தனர்.
அண்ணா பல்கலைக்கழகத் துணைப் பதிவாளர் பார்த்தசாரதி இந்த நிலையில் இந்த மோசடிக்கு மூளையாகச் செயல்பட்ட அண்ணா பல்கலைக்கழக துணைப் பதிவாளர் பார்த்தசாரதியை மத்திய குற்றப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். பார்த்தசாரதியின் மகன் விஸ்வேஸ்வரன் பார்த்தசாரதிக்கு பல அரசு அலுவலர்களைத் தெரியும் எனக் கூறி, அதன்மூலம் பி.ஆர்.ஓ. வேலைக்கு 15 லட்சம் ரூபாயும், மின்வாரியத்தில் உதவி இன்ஜினீயர் வேலைக்கு ரூ.10 லட்சமும், இளநிலை உதவியாளர் வேலைக்கு 8 லட்சம் ரூபாயும், ஆசிரியர் வேலைக்கு ரூ.10 லட்சமும் நிர்ணயம்செய்து பணம் வசூலித்துள்ளனர்.
அரசு வேலைக்கான நியமன ஆணைகளைப் போலியாகத் தயாரித்து விநியோகித்து பல கோடிகளைச் சுருட்டியதற்கு உடந்தையாக அண்ணா பல்கலைக்கழகத் துணைப் பதிவாளர் பார்த்தசாரதியின் மகன் விஸ்வேஸ்வர் பல இடைத்தரகர்களை வைத்துக்கொண்டு மோசடி செய்துவந்துள்ளார்.
மேலும், போலி ஆணைகளை வைத்து பணத்தைப் பெற்றுக்கொண்ட பார்த்தசாரதி தனக்குத் தெரிந்த நபர்கள் மூலம் போலியான நேர்காணல் அழைப்புகளை நடத்தி மோசடி செய்துள்ளார். இதையடுத்து கைதுசெய்யப்பட்ட பார்த்தசாரதியை நீதிமன்றத்தில் முன்னிறுத்திச் சிறையில் அடைத்தனர்.