1974முதல் 1979ஆம் ஆண்டுவரை அண்ணா பல்கலைக்கழகத்தின் அழகப்ப செட்டியார் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில், கெமிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல்ஸ் அண்ட் லெதர் தொழில்நுட்பம் ஆகிய பாடப்பிரிவுகளில் படித்த மாணவர்கள் சென்னையில் இன்று மீண்டும் சந்தித்தனர். அப்பொழுது தங்களுக்கு பொறியியல் தொழில்நுட்ப பாடத்தினை கற்பித்த பேராசிரியர்களை அழைத்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
40 ஆண்டுகள் கழித்து பழைய மாணவர்கள் ஒன்றுகூடி தங்களுக்குள் பழைய நினைவுகளைப் பரிமாறிக்கொண்டனர். அவர்கள் தங்களின் பழைய நண்பர்களைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் கட்டித்தழுவிக்கொண்டனர். இதற்காக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, மஸ்கட் போன்ற நாடுகளில் பணிபுரிந்துவரும் முன்னாள் மாணவர்கள் வந்திருந்தனர்.
இச்சந்திப்பு குறித்து கண்ணா என்பவர் கூறும்போது, ”முன்னாள் மாணவர்களைச் சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பொறியியல் துறையில் வேலைவாய்ப்பு ஏற்ற இறக்கத்துடன் இருந்துவருகிறது. அவ்வப்போது ஏற்படும் தேவைக்கேற்ப வேலை வாய்ப்பானது அதிகரிக்கும். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஒப்புயர்வு அளிக்கப்பட உள்ளது என்பது மகிழ்ச்சியாக உள்ளது. சென்னை ஐஐடி சிறந்த நிறுவனம் என கூறிவருகின்றனர். அண்ணா பல்கலைகழகம் அதைவிட சிறந்த நிறுவனம்" எனத் தெரிவித்தார்.