அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக அறிவிக்கக்கோரி சென்னை தரமணியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குநர் (ஐசிடிஎஸ்) அலுவலகம் முன்பு இன்று (பிப். 5) போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை, ஏழாவது ஊதியக்குழு அமலாக்கத்தின்போது அரசு ஊழியராக்கப்படுவார்கள் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110ஆவது விதியின் கீழ் அறிவித்தார்.
அதன்படி, அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும். ஊழியர்களுக்கு ரூ. 21 ஆயிரம், உதவியாளர்களுக்கு ரூ. 18 ஆயிரம் ஊதியமாக வழங்க வேண்டும் என்று போராட்டத்தின்போது வலியுறுத்தினர்.
போராட்டத்தில் பேசிய சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், “கரோனா ஊரடங்கு காலத்தில் முன்களப் பணியாளர்களாக அங்கன்வாடி ஊழியர்கள் செயலாற்றினர். எனவே, அங்கன்வாடி ஊழியர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அரசு செயல்பட வேண்டும்” என்றார்.
இதைத்தொடர்ந்து ஐசிடிஎஸ் (ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள்) திட்ட இயக்குநர் கவிதா ராமனை சந்தித்து சங்கத் தலைவர்கள் பேசினர். அப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
அதனைத்தொடர்ந்து, சங்க பிரதிநிதிகள் தலைமைச் செயலகத்தில் சமூகநலத்துறை செயலாளர் மதுமிதாவை சந்தித்து மீண்டும் பேச்சுவார்த்தையை நடத்தினர். இதில், அங்கன்வாடி பணியாளர்கள் அரசு ஊழியர்களாக விரைவில் அறிவிக்கப்படுவார்கள் எனக் கூறியதாக பொதுச் செயலாளர் டெய்சி தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு வழக்குகள் திரும்பப் பெறப்படும்- முதலமைச்சர் அறிவிப்பு