இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வேடந்தாங்கல் பறவைகள் வாழிடத்தின் சுற்றளவை 40% அளவுக்கு குறைக்க தமிழ்நாடு அரசு முடிவுசெய்திருப்பது மிகவும் கவலையளிக்கிறது. தனியார் மருந்து நிறுவனத்தின் வணிக நலனுக்காக பறவைகள் வாழிட சுற்றளவை குறுக்க நினைப்பது எந்த வகையிலும் நியாயமாகாது.
வேடந்தாங்கல் வாழிடத்தைச் சுற்றியுள்ள வேளாண் விளைநிலங்கள் அழிக்கப்பட்டு, அவற்றில் தொழிற்சாலைகளுக்காகவும், குடியிருப்புகளுக்காகவும் பிரமாண்ட கட்டடங்கள் கட்டப்பட்டுவருகின்றன. விளைநிலங்கள் அழிக்கப்படுவதால் விருந்தினராக வரும் பறவைகளுக்குப் போதிய உணவு கிடைப்பதில்லை.
பறவைகள் வாழிடத்தைச் சுற்றி குறைந்தது 10 கி.மீ. சுற்றளவு பகுதிகள் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக (Eco Sensitive Areas- ESA) அறிவிக்கப்பட வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
ஆனால், பெரும்பாலான வாழிடங்களில் இந்த அளவுக்கு சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் உருவாக்கப்படவில்லை. அதுவே பெரும் குறையாக இருக்கும்போது பறவைகள் வாழ்வதற்காக உள்ள பகுதிகளை மருந்து ஆலைகளுக்குத் தாரைவார்ப்பது நியாயமல்ல.