தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'பிரதமராகவே செயல்படும் முதலமைச்சர் ஸ்டாலின்' - ஆளூர் ஷா நவாஸ் புகழாரம் - திராவிட மாடல் அரசிலை வழி மொழியும் அகில இந்திய தலைவர்கள்

எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, முதலமைச்சராக செயல்பட்டார். முதலமைச்சராக வந்த பின் பிரதமராக செயல்படுகிறார் நமது முதலமைச்சர் என சமூக வலைதளங்களில் பேசப்படுவதை உண்மையாக்கி வருகிறார் என்று ஆளூர் ஷா நவாஸ் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

ஆளூர் ஷா நவாஸ் புகழாரம்
ஆளூர் ஷா நவாஸ் புகழாரம்

By

Published : Apr 12, 2022, 7:19 AM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இதில், பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று (ஏப். 10) நடைபெற்றது. இந்த விவாதத்தில் விசிக துணைப் பொதுச்செயலாளரும், நாகப்பட்டினம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் உரையாற்றினார்.

உக்ரைன் மாணவர்கள் மீட்பு; சிறந்த திட்டமிடல்: விவாதத்தில் பேசிய அவர், "கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை எடுத்து வரும் தமிழ்நாடு அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும், உக்ரைன் மாணவர்களை மீட்டதில் நமது முதலமைச்சர், பிரதமரை போல செயல்பட்டார். துபாய் சென்று முதலீடுகளை ஈட்டிய போது, பிரதமராகவே வெளிப்பட்டார். அத்துடன், முதலமைச்சரின் 'திராவிட மாடல்' அரசியலை அகில இந்திய தலைவர்கள் வழி மொழிகிறார்கள்.

கல்விக்கு நிதி ஒதுக்குவதில் கணக்கீடு வேண்டாம்: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன். அற்புதமான இந்த திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டும். நிதி ஒதுக்குவதில் எந்தத் துறைக்கு வேண்டுமானாலும் செலவு கணக்கு பாருங்கள், ஆனால், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறைக்கு செலவு செய்வதை கணக்கு பார்க்க வேண்டாம்.

கல்வித்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். மாதிரிப் பள்ளிகள் உருவாக்குவதில் குறிப்பிட்ட சில பள்ளிகள் என்று இல்லாமல் பாரபட்சமின்றி சிறப்பான கட்டமைப்பை உருவாக்கி எல்லா பள்ளிகளையும் மாதிரி பள்ளிகளாக மாற்ற வேண்டும். பல்கலைக்கழகங்களில் பணியிடங்களை நிரப்புவதில் சமூக நீதியை பாதுகாக்க இட ஒதுக்கீடு முழுமையாக பின்பற்றபட வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தார்.

வகுப்புவாத சிந்தனையைத் தடுக்க வேண்டும்: இதற்கு, பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "சமூக நீதியை பாதுகாக்க முதலமைச்சர் தலைமையிலான அரசு முனைப்போடு இருக்கிறது. பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீடு முழுமையாக பின்பற்றப்படும்" என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ஆளூர் ஷாநவாஸ், 'ஐஐடி நிறுவனம் தன்னாட்சி பெற்ற அமைப்பாக இருந்தாலும், தமிழ் மண்ணில் இயங்குவதால் அங்கேயும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி இயங்கிவரும் பள்ளியில் ரம்ஜான் நோன்பு இருந்த இஸ்லாமிய மாணவர்களையும் உணவருந்த சொல்லி ஆசிரியர் வற்புறுத்தியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் இந்த மாதிரியான வகுப்புவாத சிந்தனைகள் தடுக்கப்பட வேண்டும்.

சிறுபான்மை கல்லூரிகளில் 7.5% இட ஒதுக்கீடு: பள்ளி மாணவர்கள் பேருந்து படியில் பயணம் செய்வது அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க பள்ளி நேரங்களில் தமிழ்நாடு அரசு அதிக பேருந்துகளை இயக்க வேண்டும். அரசு உதவிபெறும் சிறுபான்மை கல்லூரிகளிலும் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். நாகூரில் மகளிர் கல்லூரியும், சட்டக்கல்லூரியும் அமைத்துத் தரவேண்டும். நாகப்பட்டினம் தொகுதியில் உள்ள பழுதடைந்த பள்ளிகளை சீரமைத்து தர வேண்டும்" என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க:'தற்போதுள்ள இரட்டை இலை எம்ஜிஆர், ஜெயலலிதாவிடம் இருந்ததுதானா?'

ABOUT THE AUTHOR

...view details