சென்னை: தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் 9ஆம் வகுப்பில் முழு ஆண்டுத் தேர்வு எழுதுவதற்கு வராவிட்டால் அவர்களை தோல்வி அடைந்தவர்களாக அறிவிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் 2021-22ஆம் கல்வியாண்டில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையில் படித்த மாணவ-மாணவர்களுக்கான மே மாதம் 6ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையில் முழு ஆண்டுத்தேர்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை பள்ளிகளில் தயாரித்து அளிக்க வேண்டும் எனப் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.
9ஆம் வகுப்பில் முழு ஆண்டு தேர்வு எழுதாதவர்கள் தோல்வி- பள்ளிக் கல்வித்துறை அதன்படி , எல்கேஜி முதல் 5ஆம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. 6,7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படுகிறது. 8,9ஆம் வகுப்பிற்கு முழு ஆண்டுத் தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்பட வேண்டும்.
மாணவர்கள் தேர்வினை எழுதி இருந்தால், குறிப்பிட்ட மதிப்பெண்கள் பெறாவிட்டாலும், பள்ளியின் ஆசிரியர் குழுவினர் முடிவு செய்து தேர்ச்சி வழங்கலாம். 9ஆம் வகுப்பு முழு ஆண்டுத்தேர்வினை எழுத வராத மாணவர்களை தோல்வியுற்றதாக கருதப்பட்டு அறிவிக்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் கல்வியை பயில வேண்டும் என்பதால், தேர்வு எழுத வராத மாணவர்களையும் கண்டறிந்து துணைத்தேர்வினை வைத்து தேர்ச்சி வழங்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க :Radhika Merchant Arangetram: களைகட்டிய மும்பை, அம்பானி மருமகள் பரதநாட்டிய அரங்கேற்றம்!