தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அதிமுகவை தோற்கடித்த தமிழ் மக்களுக்கு நன்றி - ஏஐடியூசி செயலாளர் - அதிமுக

சென்னை: மோடி அரசுடன் கூட்டணி வைத்த அதிமுகவை தேர்தலில் தோற்கடித்ததற்காக தமிழ் மக்களுக்கு ஏஐடியூசி செயலாளர் அம்ர்ஜீத் கெளர் நன்றி தெரிவித்துள்ளார்.

அம்ர்ஜீத் கெளர்

By

Published : Aug 12, 2019, 6:36 PM IST

இது தொடர்பாக ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் அம்ர்ஜீத் கெளர் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், “தேர்தலுக்கு பிறகு தமிழ்நாட்டுக்கு நான் முதல் முறையாக இப்போதுதான் தமிழ்நாடுவருகிறேன். மோடி அரசாங்கம் மட்டுமல்லாது அவர்களோடு கூட்டணி வைத்த யாருக்கும் தமிழ் மக்கள் வாக்களிக்காமல் அவர்களை தோற்கடித்திருப்பதற்கு என்னுடைய வாழ்த்துகள். பாஜக அரசின் இந்த கொடூரமான ஆட்சியை எதிர்த்து தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்ப வேண்டும்.

காஷ்மீர் விவகாரத்தில் 370 சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமா இல்லையா என்பதை அம்மாநில மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். வாக்கெடுப்பு நடத்தி இந்த நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால் தற்போது அங்கு யாரும் நுழையமுடியாத நிலையை உருவாக்கியுள்ளனர்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையையும் இவ்வாறுதான் கொண்டுவந்தனர், இதனால் பத்து லட்ச சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டு நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது ஆனால் அதை மறைத்து நாட்டின் பொருளாதாரம் அதிகரித்துள்ளதாக மோடி பொய் கூறிவருகிறார். அவர்கள் பொருளாதார அளவுகோளை கூறும்போது இரண்டரை விழுக்காடு உயர்த்திக் கூறுவது வழக்கம் என்று அவர்களுடைய பொருளாதார ஆலோசகரே குற்றம்சாட்டியுள்ளார்" என தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், "தொழிலாளிகளுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 18 ஆயிரம் ரூபாய் வழங்கவேண்டும். நாங்கள் வலியுறுத்திவருகின்ற அதே வேளையில் ஒரு நாளைக்கு 178 ரூபாய் அதுவும் 26 நாள்களுக்கு மட்டுமே என்று மொத்தம் ஐந்து ஆயிரத்துக்கும் குறைவான தொகையை குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயிக்க சட்டம் இயற்றியுள்ளனர். இவ்வாறு தொழிலாளர் நலச்சட்டங்களை நான்கு சட்டங்களாக சுருக்கியுள்ளனர். இதில் செய்தியாளர்களுக்கான சட்டத்தையும் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து கடந்த மாதம் பல போராட்டங்கள் நடத்தினோம். நாட்டிலுள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து இந்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும். இதற்காக வருகின்ற செப்டம்பர் மாதம் பெரியளவில் போராட்டங்கள், பேரணிகள் நடைபெறும்” என்றும் அவர் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details