சென்னை: கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் இன்று (ஜூலை 6) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "கடந்த ஜூன் மாதம் நடந்த பொதுக்குழுவிற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திட்டு அழைப்பிதழ் வந்தது. தற்போதைய அழைப்பிதழில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பெயர் இல்லை. தலைமை கழக நிர்வாகிகள் என்ற பெயரில் உள்ளது.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் தலைமை கழகம் எப்படி கடிதம் அனுப்ப முடியும். யார் அந்த கடிதத்தை கொடுத்தார்கள்? அது உண்மையா என தெரியவில்லை; அந்த அழைப்பிதழ் எடப்பாடிக்கு துதி பாடுகிற அழைப்பிதழ் ஆகும்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தகுதி இல்லாமல் விமர்சனம் செய்கிறார். பன்னீர்செல்வத்தை பற்றி பேச அவருக்கு எந்த உரிமையும் இல்லை. இதுபோன்று பேசினால் சிறைக்கு அனுப்பப்படுவார் என்று எச்சரிக்கை விடுக்கிறேன். மாதவரம் மூர்த்தியை வரவழைத்து ஒற்றை தலைமையை குறித்து எடப்பாடி பேச வைத்தவர். அதிமுக என்ன எடப்பாடியின் குடும்ப கட்சியா? அதிமுக எடப்பாடி உருவாக்கிய கட்சி அல்ல; அது எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி ஆகும்.