இதுதொடர்பாப அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட 2021-2022 ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலையை அறிக்கையை ஒப்பிடும்போது , திமுக ஆட்சிக் காலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2021-2022 ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையில், காவல்துறை , தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை , நீதித்துறை நிர்வாகம் , நெடுஞ்சாலைகள் துறை, உயர் கல்வித் துறை , மருத்துவம் மற்றும் குடும்ப நலத் துறை, மதிய உணவு திட்டம், பள்ளிக் கல்வித் துறை, குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் போன்றவற்றிற்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய நான் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டு இருந்தேன்.
நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதன் சுணக்கம் காரணமாக அந்தத் துறைகளின் செயல்பாடுகளில் ஏதாவது பிரச்னை ஏற்படும் என்ற எண்ணம் அனைவர் மத்தியிலும் அப்போது எழுந்தது. அது தற்போது நிருபிக்கப்பட்டுவிட்டது என அறிக்கையில் கூறியுள்ளார்.
நிதி ஒதுக்கீடு பற்றாக்குறை
மேலும் அதிமுக ஆட்சிக் காலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2021-2022 ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறைக்கு 19,420 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது . ஆனால் , திமுக ஆட்சிக் காலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட திருத்திய நிதிநிலை அறிக்கையில் 18,933 கோடி ரூபாய் நிதி தான் ஒதுக்கப்பட்டது என குற்றம் சாட்டியுள்ளார். அதாவது, கிட்டத்தட்ட 487 கோடி ரூபாய் குறைவாக நிதி ஒதுக்கப்பட்டது .
இதன் விளைவு , ஊடுகதிர் படங்களான எக்ஸ்ரே, வெள்ளைத் தாளில் அச்சிடப்பட்டு மக்களுக்கு வழங்கக்கூடிய நிலை தற்போது அரசு மருத்துவமனைகளில் ஏற்பட்டு இருக்கிறது . தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுத்துக் கொண்ட மக்களுக்கு அதற்கான முடிவுகள் வெள்ளைத்தாளில் விநியோகிக்கப்படுகின்றன.
இதற்குக் காரணம் நிதிப்பற்றாக்குறைதான், வெள்ளைத்தாளில் முடிவுகள் தரப்படுவதன் காரணமாக, முடிவுகள் தெளிவாக இல்லாத சூழ்நிலையில் வேறு ஒரு மருத்துவரிடம் காண்பித்து நோய் குறித்து இரண்டாவது கருத்தினை வாங்க முடியாத சூழ்நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.