சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட 8,250 பேர் விருப்ப மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேர்காணல் இன்று தொடங்கியது. அதிமுக ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்களான ஓபிஎஸ், இபிஎஸ், வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, மதுசூதனன், வளர்மதி, தமிழ்மகன் உசேன், ஜஸ்டின் செல்வராஜ், வேணுகோபால் ஆகியோர் முன்னிலையில் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்று வருகிறது.
எப்போதும் பல கட்டங்களாக நடைபெறும் அதிமுக வேட்பாளர் நேர்காணல், இம்முறை ஒரே கட்டமாக நடைபெறுகிறது. குறிப்பாக இரண்டு பகுதிகளாக இந்த நேர்காணல் நடைபெறுகிறது. மேலும் ஐந்து, ஐந்து மாவட்டங்களாக பிரித்து ஒவ்வொரு குழுவாக ஒருங்கிணைந்த நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது.
காலை 9 மணிக்கு தொடங்கிய நேர்காணலின் முதல் பகுதியில், 7 குழுக்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது அதிமுகவின் கட்சி ரீதியான 75 மாவட்டங்களுக்கு நேர்காணல் நடத்தப்படுகிறது. மாலை 3 மணிக்கு இரண்டாவது பகுதியாக 7 குழுக்கள் மற்றும் புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் நேர்காணல் நடைபெற உள்ளது. நேர்காணலின் போது கட்டாய முகக்கவசம் அணிதல் மற்றும் செல்ஃபோனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.