சென்னை: ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அதிமுக-வின் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில் பேசிய முதலமைச்சரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே பழனிசாமி, “தமிழ்நாட்டை 30 ஆண்டுகளாக ஆண்ட ஒரே பெருமை அதிமுகவுக்கு உள்ளது. இருபெரும் தலைவர்களுக்கு வாரிசுகள் கிடையாது. நாம்தான் வாரிசு. இந்த நாட்டு மக்கள்தான் வாரிசுகளாக உள்ளனர்.
எத்தனையோ பேர் கட்சியையும், ஆட்சியையும் விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தங்கள் வீட்டுக்காக உழைப்பவர்கள். ஆனால் நாட்டுக்காக உழைக்கும் ஒரே கட்சி அதிமுக. புல்லுறுவிகள், துரோகிகள் சிலர் இயக்கத்தை உடைக்க நினைத்தார்கள். அதனை நிர்வாகிகள் இணைந்து ஒன்றாக எதிர்கொள்வோம். இந்தியாவிலேயே தொண்டனை முதலமைச்சர்களாக்கிய ஒரே கட்சி அதிமுக மட்டும்தான்.
ஒற்றுமையுடன் இருந்தால் எதையும் வெல்லலாம். நாளை பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஆகலாம், நாளை நீங்களும் கூட ஆகலாம். உண்மையாக உழைக்கும் தொண்டருக்கு வீடு தேடி சென்று, கதவை தட்டி அதிமுகவில் பதவி வழங்கப்படும். திமுக தலைவர் ஸ்டாலின் மாநிலம் முழுவதும் சென்று, அதிமுக ஆட்சியில் எதுவும் செய்யவில்லை எனக் கூறி வருகிறார். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நாம் மக்களிடம் சாதனைகளை எடுத்துக் கூறி முறியடிக்க வேண்டும்.
மழை பெய்தபோது சென்னையில் தண்ணீர் தேங்கி உள்ளது என ஸ்டாலின் கூறினார். அவர் சென்னை மேயராக இருந்தபோதோ, உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், துணை முதலமைச்சராக இருந்தபோதும் சென்னை மக்களுக்கு ஏதாவது செய்தாரா? தேர்தல் வரும் போது சுற்றி சுற்றி வருவார். பின்னர் மக்களை ஏமாற்றி விட்டுச் செல்வார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் இந்தியாவிலேயே ஒரு சிறந்த நினைவிடமாக கட்டுமான பணிகள் நடைபெற்றுவருகிறது. விரைவில் நினைவிடம் திறக்கப்படவுள்ளது. அதில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக வந்து பங்கேற்க வேண்டும். இதைபோல போயஸ் தோட்டத்திலுள்ள ஜெயலலிதாவின் இல்லம், நினைவில்லமாக மாற்றப்படும்” என்றார்.