தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பயிர்க் காப்பீட்டுத் திட்டம்: 70 விழுக்காடு விவசாயிகள் பயன்

சென்னை: பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 70 விழுக்காடு விவசாயிகள் பயனடைந்துள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை துறை தெரிவித்துள்ளது.

By

Published : Jul 8, 2020, 6:27 AM IST

பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், காரீப் 2020 பருவ பயிர்களை காப்பீடு செய்ய விவசாயிகளை கேட்டுக் கொள்வது தொடர்பான செய்திக் குறிப்பில், “அகில இந்திய அளவில் பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது. இத்திட்டம் துவங்கிய 2016-2017ஆம் ஆண்டு முதல் இதுநாள் வரை ரூ. 8155.33 கோடி இழப்பீட்டுத் தொகையானது சுமார் 40.84 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுள் 70 விழுக்காட்டினர் பயனடைந்துள்ளனர்.

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் மேலும் பயன்பெறும் வகையில், மத்திய அரசு பல்வேறு புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் காரீப், 2020 பருவத்திற்கான மாவட்டங்கள், பயிர்கள் மற்றும் வருவாய் கிராமங்களை அறிவிக்கை செய்து ஜூன் 1ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசு ஆணை வழங்கியுள்ளது.

இதன்படி கார், குறுவை, சொர்ணவாரி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெல், காரீப் பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பயிறுவகைகள், சிறுதானியங்கள், எண்ணெய்வித்துக்கள், பருத்தி மற்றும் தோட்டக்கலை பயிர்களையும் காப்பீடு செய்வதற்கு மாவட்ட வாரியாக காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டு, விவசாயிகள் பதிவு செய்துவருகின்றனர்.

டெல்டா மாவட்டங்களை பொறுத்தவரை, நடப்பாண்டில், மேட்டூர் அணையானது, ஜூன் 12ஆம் தேதி அன்று பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளதால், குறுவை நெல் சாகுபடி முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இம்மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் பயிரை காப்பீடு செய்வதற்கு, ஜூலை 31ஆம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளில் கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்களிலோ அல்லது வங்கிகளிலோ நடப்பு ஆண்டுக்கான அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கிக்கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், முன்மொழிவு படிவம் போன்ற ஆவணங்களை வழங்கி, தங்கள் பயிர்களை காப்பீடு செய்து கொள்ளலாம்.

மாநிலத்தின் இதர மாவட்டங்களில் காரிப் பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெல் மற்றும் இதரப் பயிர்களை காப்பீடு செய்வதற்கு கடைசி தேதி மாவட்ட வாரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் கடைசி தேதி வரை காத்திருக்காமல் அதற்கு முன்னதாகவே காப்பீடு செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

எதிர்பாராத இயற்கை சீற்றங்களால் பயிர்கள் பாதிப்படைந்தால், திட்ட விதிமுறைகளின்படி, பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை கிடைக்கும். கடந்த 2019ஆம் ஆண்டு காரீப் பருவத்தில் இத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட 9 ஆயிரத்து 281 விவசாயிகளுக்கு இதுவரை, 13.69 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, எதிர்பாராத இயற்கை சீற்றங்களால் பயிர்கள் பாதிப்படைந்தால், திட்ட விதிமுறைகளின்படி, பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகை கிடைக்கும் என்பதால், 2020 காரீப் பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பயிர்களை உரிய காலத்திற்குள் காப்பீடு செய்து பயனடையுமாறு விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details