சென்னை: அரசு ஊழியர்களுக்கான 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் ஊதிய விகிதத்தில் முரண்பாடு காணப்பட்டதால், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு, ஊதிய விகிதங்கள் மாற்றி அமைத்து 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன. அதில் 2009ஆம் ஆண்டுக்கு பிறகு நியமிக்கப்படவர்களுக்கு ஊதிய உயர்வு சலுகை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த அரசாணைக்கு முரணாக உள்துறை, கல்வி, வருவாய், சுகாதாரம், நிதி உள்ளிட்ட துறைகளில் 2009ஆம் ஆண்டுக்கு பிறகு தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகளில் சேர்ந்த 4 ஆயிரத்து 500 பேருக்கு இந்த அரசாணையின் பலன் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல தங்களுக்கும், ஊதிய உயர்வு பலன்களை 18 சதவீத வட்டியுடன் வழங்க உத்தரவிடக் கோரி வேளாண் துறையில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணியில் உள்ள 18 பேர் 2018ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர். சுரேஷ்குமார், 2009ஆம் ஆண்டுக்கு பிறகு நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு பணப்பயன்கள் வழங்கப்பட்டுள்ளதா என்ற விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், "2006, 2007ஆம் ஆண்டுகளில் தட்டச்சர், சுருக்கெழுத்தர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 4 ஆயிரத்து 500 பேரின் பட்டியலையும், இவர்களில் ஒவ்வொரு துறைக்கும் எத்தனை பேர் நியமிக்கப்பட்டுள்ளனர், எத்தனை பேருக்கு ஊதிய உயர்வு சலுகை வழங்கப்பட்டுள்ளது என்பன குறித்த விவரங்களையும் தாக்கல் செய்ய இருக்கிறோம்" என தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த விவரங்களை சமர்ப்பிக்கும் வகையில், வழக்கின் விசாரணையை செப். 26ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க:ஹுப்பள்ளி இத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுமதி - நள்ளிரவில் நீதிமன்றம் உத்தரவு