தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அரசு முறைப் பயணமாக சென்றிருந்தார். கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் பழனிசாமி இங்கிலாந்து சென்றிருந்தார். அங்கிருந்து செப்டம்பர் 1ஆம் தேதி அமெரிக்கா சென்ற அவர் தொடர்ந்து ஒரு வாரம் தங்கி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
பின்னர் இறுதியாக துபாய் சென்ற அவர் இன்று அதிகாலை 2.50க்கு விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அப்போது அமைச்சர்கள்,முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் முதலமைச்சருக்குப் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, ‘புதிய தொழில் முதலீடுகள், முதலீட்டார்களை ஈர்க்க நான் 13 நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு வந்துள்ளேன். இதில் எண்ணற்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. கிங்ஸ் மருத்துவமனையின் கிளை தமிழகத்தில் கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மலேரியா,டெங்கு போன்றவற்றை கட்டுப்படுத்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. லண்டன் மாநகரில் பயன்படுத்தப்படும் ஆம்புலன்ஸ் முறையை பின்பற்ற ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
அமெரிக்காவில் தனியார் கால்நடை வளர்ப்பு குறித்து ஆராய்ந்து அதை நம் சேலம் தலைவாசலில் அந்த தொழில்நுட்பத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். அமெரிக்காவில் போடப்பட்டுள்ள 16 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் வாயிலாக 17,760 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
நியூயார்கில் துவக்கப்பட்ட யாதும் ஊரே திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மாசில்லா எரிசக்தி நிறுவனத்தை பார்வையிட்டேன், அதை தமிழகத்தில் கொண்டு வர உள்ளோம்.துபாயில் தொழில் முனைவோர்களை சந்தித்து வலியுறுத்தி உள்ளதால் அங்கிருந்து அதிகமான முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளனர்.
மலேரியா,டெங்கு போன்றவற்றை கட்டுப்படுத்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மொத்தம் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. இதன்மூலம் 35,520 நபர்கள் வேலை வாய்ப்பைப் பெற உள்ளனர். ஸ்டாலின் தான் நினைத்தை நடத்த முடியாத காரணத்தினால் என் மீது எரிச்சலும்,பொறாமையும் கொண்டு பேசி வருகிறார் என்று கூறினார்.
பின்னர் கோட் சூட் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு அவர்களின் மொழியில் பேசினால் தான் புரியும். அதே போல் அந்த ஊர் ஆடையை அணிந்தால் அது உகந்ததாக இருக்கும். வெளி நாடுகளில் நம் தமிழர்களின் பங்கு அதிகமாக உள்ளது. அடுத்து இஸ்ரேல் செல்ல உள்ளோம், அங்கு உள்ள நீர்ப் பாசன முறைகளை நம் தமிழ்நாட்டில் கொண்டு வர திட்டம் உள்ளது என்றார்.