மாநிலம் முழுவதும் கரோனா தொற்று பரவி வரும் இந்த சூழலில், பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குநர் குழந்தைசாமி ஈடிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”கரோனா வைரஸ் தாக்குதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில், அழகு நிலையங்களைத் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதனால், அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, சிகை அலங்காரம் மற்றும் அழகு நிலையங்களில் உள்ளவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து கடைகளை திறக்க அறிவுரை வழங்கலாம்.
மருத்துவமனைகளில் மறுநாள் நடைபெறும் அறுவை சிகிச்சைகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை, கிருமி நாசினிகள் கொண்டு சுத்தம் செய்து தனித்தனியாக முதல் நாளே தயார் நிலையில் வைத்திருப்போம். அதேபோல, முடி திருத்தும் நிலையம் மற்றும் அழகு சாதன நிலையங்களிலும் மறுநாள் வருபவர்களுக்கு ஏற்ப, தனித்தனியாக அதற்குரிய கருவிகளை முதல் நாளே சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும்.