திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், ’இதயங்களை இணைப்போம்' என்ற தலைப்பில் சிறுபான்மையினர் அணி மாநாடு வரும் ஜனவரி 6 ஆம் தேதி, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் திமுக கூட்டணியில் உள்ள முஸ்லீம் கட்சிகள், அமைப்புகள் கலந்து கொள்ளும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் ஹைதராபாத்தில் நேற்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் நிறுவனர் அசாதுதீன் ஓவைசியை திமுக சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு செயலாளர் மஸ்தான் திடீரென சந்தித்துப் பேசினார். அப்போது திமுக மாநாட்டில் பங்கேற்க ஓவைசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது. இது, தமிழக முஸ்லீம் கட்சிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் ’தடா’அப்துல் ரஹீம், "கூட்டணியில் உள்ள முஸ்லீம் கட்சிகளை மிரட்டவே ஓவைசியை மாநாட்டிற்கு திமுக அழைத்துள்ளது. இதுபோன்ற தவறான செயல்பாடுகளால் கிடைக்கக்கூடிய முஸ்லிம் வாக்குகள் முழுவதையும் திமுக இழக்க நேரிடும். தமிழ்நாட்டில் முஸ்லீம் அரசியல் கட்சிகளின் கட்டமைப்புக்கு முன், ஓவைசி கட்சி பூஜ்யம் என்பதை திமுக உணராதது ஏன்? இது போன்ற விஷப் பரீட்சையில் திமுக இறங்குமானால் விளைவுகள் மோசமாகும். திமுக சமுதாய அமைப்புகளை கொச்சைப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று விமர்சித்துள்ளார்.
இதே மனநிலையிலேயே திமுக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள முஸ்லீம் கட்சிகளும் இருப்பதாகத் தெரிகிறது. தங்களது அதிருப்தியை தெரிவிக்கவும், மாநாட்டில் ஓவைசி பங்கேற்றால் புறக்கணிக்கவும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சிகள் முடிவு செய்து அதனை மு.க.ஸ்டாலினிடம் நேரில் தெரிவிக்க இருப்பதாகவும் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து ஓவைசியை மாநாட்டிற்கு அழைக்கும் முடிவிலிருந்து திமுக பின்வாங்கியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் சிறுபான்மை நல உரிமை செயலாளரும், ஓவைசியை நேரில் சந்தித்தவருமான மஸ்தான் விடுத்துள்ள மறுப்பு அறிக்கையில், "கூட்டத்திற்கு எப்போதும் போல் தோழமை கட்சித் தலைவர்கள் மட்டுமே சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருக்கிறார்கள். மற்றபடி தொலைக்காட்சிகளில் வருவது போன்ற செய்தியில் உண்மையில்லை” என்று விளக்கமளித்துள்ளார்.