தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

எடப்பாடி பழனிசாமி செலவு செய்த பணத்துக்கு 100 வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கலாம் - வழக்கறிஞர் குற்றஞ்சாட்டு - அதிமுக செலவழித்த பணம் விவரங்கள்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், கடந்த 10 ஆண்டுகளில் சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள அரசு இல்லத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள், நீதியரசர்கள் வசித்த இல்லத்திற்கு பொதுப்பணித்துறைப் பராமரிப்பு செலவுக்காக 60 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவான பதிவை காண்போம்.

எடப்பாடி செலவு செய்த பணத்துக்கு 100 வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கலாம்
எடப்பாடி செலவு செய்த பணத்துக்கு 100 வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கலாம்

By

Published : Dec 15, 2021, 7:35 PM IST

Updated : Dec 15, 2021, 9:45 PM IST

சென்னை:கடந்த 2011 முதல் 2021ஆம் ஆண்டு வரைக்குமான சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள அரசு இல்லத்தை பயன்படுத்திய முன்னாள் அதிமுக அமைச்சர்கள், நீதிபதிகள் வசித்த அரசு இல்லத்திற்கு பொதுப்பணித்துறை சார்பில் பராமரிப்புச் செலவுக்காக, கடந்த 10 ஆண்டுகளில் 60 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், கோயம்புத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன் நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பின்பு பெற்றுள்ளார்.

இது குறித்து லோகநாதன் கூறுகையில், 'கடந்த 10 ஆண்டுகளில் சென்னை கிரீன்வேஸ்-ல் உள்ள அரசு இல்லத்தில் பொதுப்பணித் துறையால் கட்டடங்களை சீரமைத்தல் மற்றும் பழுதுபார்த்தல் உள்ளிட்டப் பணிகளை செய்ய அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கியிருந்த அரசு இல்லத்திற்கு 28 கோடி ரூபாயும், நீதியரசர்கள் தங்கி இருந்த அரசு இல்லத்திற்கு 31 கோடி ரூபாயும் செலவு செய்யப்பட்டுள்ளது.

மொத்தமாக கடந்த 10 ஆண்டுகளில் 60 கோடி ரூபாய் பொதுப்பணித்துறை மூலம் பராமரிப்புக்காக மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது.

இதைத் தவிர மின்கட்டணம், குடிநீர் கட்டணம், அமைச்சர்கள், நீதிபதிகள் போக்குவரத்திற்கான, வாகனங்களுக்கான எரிபொருள், பழுதுபார்க்கும் செலவுகள் உள்ளிட்ட செலவுகளை பொதுமக்களின் வரிப்பணம் மூலம் செலவு செய்திருக்கிறார்கள்.

அமைச்சர்கள் எளிமையான வாழ்க்கை வாழ்கிறார்களா?

உங்கள் வீட்டு பிள்ளை என்று வீடு வீடாக சென்று ஓட்டு கேட்டு வெற்றியடைந்து, சட்டப்பேரவை உறுப்பினரான பின்பு அமைச்சராகி எளிமையான வாழ்க்கையை வாழ்கின்றனரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எளிமையாக வாழ்வதாகச் சொல்லி மக்கள் வரிப்பணத்தில் தேவைக்கு அதிகமாக சொகுசு வாழ்க்கையை அதிமுக அமைச்சர்கள் வாழ்ந்துள்ளனர். இது போன்றவை வருங்காலத்தில் குறைக்கப்பட வேண்டும். அரசு பராமரிப்புக்காக குறைந்தபட்ச பணத்தை ஒதுக்க வேண்டும், ஒவ்வொரு அரசு இல்லத்திற்கும் 30 முதல் 40 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக சொல்லப்போனால், தன்னை விவசாயி என்று சொல்லக்கூடிய தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் அரசு இல்லத்துக்கு மட்டுமே கடந்த நான்கு ஆண்டுகளில் 1.70 கோடி ரூபாய் பராமரிப்புக்குச் செலவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல, துணை முதலமைச்சராக இருந்த ஓ. பன்னீர் செல்வத்தின் வீட்டுக்கு 84.5 லட்சம் ரூபாய் பராமரிப்புச் செலவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டுக்கு 55.37 லட்சம் ரூபாய், முன்னாள் சபாநாயகர் தனபால் வீட்டுக்கு 43.37 லட்சம் ரூபாய், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டுக்கு 38.61 லட்சம் ரூபாய், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டுக்கு 31.23 லட்சம் ரூபாய், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் வீட்டுக்கு 30.45 லட்சம் ரூபாய், முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் வீட்டுக்கு 27.88 லட்சம் ரூபாய், முன்னாள் அமைச்சர் ஜி.பாஸ்கரன் வீட்டுக்கு 10.16 லட்சம் ரூபாய், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டுக்கு 9.86 லட்சம் ரூபாய், முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு 8.5 லட்சம் ரூபாய், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி வீட்டுக்கு 5.73 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

31 கோடி செலவு நீதியரசர்களுக்குத் தெரியுமா?

அரசுத் துறைகள், அரசுத் துறை அலுவலர்கள், அரசாங்கம் இவை உள்ளிட்டவை ஒழுங்காக சரிவர பணியாற்றுகின்றனவா? சட்டத்திற்கு உட்பட்டு பணியாற்றுகின்றனவா? தவறுகள் செய்கிறார்களா? போன்ற அடிப்படைப் பணிகளை செய்யும் பொறுப்பில் நீதி அரசர்களும் நீதி மன்றங்களும் இருக்கின்றன. நீதி அரசர்களுக்கு, அமைச்சர்கள் இதுபோன்று அதிகபட்சமாக ஆடம்பர செலவுகளை செய்தால் கண்காணிக்கும் பொறுப்பும் உண்டு.

அதிமுக ஆட்சியில் செய்த செலவுகள் குறித்து விளக்கும் வழக்கறிஞர்

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு கிரீன்வேஸ் சாலையில் 47 அரசு இல்லங்கள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் நீதிபதிகளின் அரசு இல்லங்களை பொதுப்பணித் துறை சார்பாக பராமரிக்க 30.88 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. இவைகளை கண்காணிக்கக் கூடிய பொறுப்பில் இருக்கும் நீதி அரசர்களுக்கு இவ்வளவு பெரியத் தொகை செலவு செய்யப்பட்டது வருத்தத்திற்குரியது.

வருகின்ற காலங்களில் இது போன்ற தேவையில்லாத செலவுகளைக் குறைக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்க வேண்டும், மற்றவர்களைக் கண்காணிக்க வேண்டும்.

மக்கள் வரிப் பணத்தை அரசாங்கம் சரிவரப் பயன்படுத்துகிறதா? என்று நீதிபதிகளும் நீதி மன்றமும் கண்காணிக்க வேண்டும். தற்போது கரோனா தொற்றால் உலக பொருளாதாரமே தலைகீழாக மாறிப் போகியுள்ளது.

தமிழ்நாடு அரசுக்கு ஏற்கனவே 5 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை உள்ள நிலையில், இது போன்ற ஆடம்பரச் செலவுகளை ஒருவர் அனுபவிப்பது, பின், மக்கள் தலையில் வரி என்ற கடன் சுமையை சுமத்துவது சரியாக இருக்காது. எனவே வருங்காலங்களில் இதுபோன்ற ஆடம்பரச் செலவுகளை குறைத்து தேவையான செலவுகளை செய்ய வலியுறுத்துகிறேன்" என்றார்.

இதையும் படிங்க:69 இடங்களில் ரெய்டு: எப்படி சிக்கினார் தங்கமணி - முழு விவரம்

Last Updated : Dec 15, 2021, 9:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details