மூன்று முறை 'தலாக்' என்ற சொல்லை உச்சரிப்பதன் மூலம் முஸ்லீம் ஆண்கள் தங்கள் மனைவியை விவகாரத்து செய்ய வழி வகுக்கும் முத்தலாக் முறை குறித்து சர்ச்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் சமீப காலமாக உலாவி வருகின்றன. முத்தலாக்கிற்கு எதிரான பெண்களின் போராட்டம், உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றம், அரசாங்கம் மற்றும் அரசியல் தளங்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இந்த மசோதாவை ஆரம்பம் முதலே எதிர்த்தே வந்தார். அவர் மறைவிற்குப் பிறகும் நாடாளுமன்றத்தில் அதிமுக தனது எதிர்ப்பை பதிவு செய்துவந்தது. ஆனால், தற்போது அதிமுகவின் இரட்டைத் தலைமை பிரச்னையால் முத்தலாக் விவாகரத்து நடைமுறை சட்டவிரோதம் என கூறும் (திருமணம் உரிமைகள் பாதுகாப்பு) மசோதா 2019 அதிமுக ஆதரவுடன் நேற்று நிறைவேறியது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்தபிறகு அதிமுகவில் பல்வேறு களேபரங்கள் நாள்தோறும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. ஒன்றுபட்ட அதிமுக அணி அணியாகப் பிரிந்து துண்டாடப்பட்டது. ஜெயலலிதாவின் நம்பிக்கை மையமாக இருந்த ஓ. பன்னீர்செல்வம் ஜெ. நினைவிடத்தில் தர்மயுத்தம் நடத்தினார். அன்று முதல் தற்போது வரை அதிமுகவில் தலைமை பிரச்னை தலையாய பிரச்னையாக உள்ளது.
அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை நீக்கி துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், முதலமைச்சர் பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துவருகின்றனர். ஆனால், இருவருக்குள் யார் பெரியவர், யாரின் கீழ் கட்சி இருக்கிறது என்று பல நேரங்களில் மறைமுக பிரச்னை எழுவது உண்டு. தமிழ்நாடு முதலமைச்சராக பழனிசாமி இருப்பதால் பல்வேறு விஷயங்களில் அவரே முன்னிலைப்படுத்தப்பட்டு பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பட்டார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தேனியில் மட்டும் வெற்றி பெற்றதன் மூலம் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பியானார். இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அதிமுக வெற்றியாளர்கள் ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி, என தனித்தனியாக ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்றுவந்தனர். ரவீந்திரநாத்தை அமைச்சர் ஆக்கினால் தனது பலம் டெல்லியில் ஓங்கும் என்று பன்னீர்செல்வம் காய் நகர்த்தி வந்தார். ஆனால், தனக்கு வேண்டப்பட்ட சீனியர் வைத்திலிங்கம் மூலம் பன்னீர்செல்வத்தின் ராஜதந்திரத்தைத் தவிடு பொடி ஆக்கினார் பழனிசாமி. இப்படியாக ஈகோ பிரச்னையால் மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டிற்கான பிரதிநிதித்துவம் பறிபோனது.