திரைப்படங்களில் நடித்து பிரபலமான எம்ஜிஆருக்கு 1950-60களில் மக்களின் மத்தியில் நல்ல செல்வாக்கு இருந்தது. மேலும், எம்ஜிஆருக்கு அரசியல் கட்சி தொடங்க அந்தச் சமயத்தில் விருப்பமில்லை, பணமும் இல்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
எனினும் திமுகவைத் தொடங்கிய சி.என் அண்ணாதுரையின் செல்லப்பிள்ளையாக எம்ஜிஆர் இருந்தார் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். பிறகு 1969ஆம் ஆண்டு அண்ணாவின் இறப்பிற்கு பின் திமுகவில் யார் அடுத்த முதலமைச்சர் என்ற கேள்வி எழுந்தபோது மு. கருணாநிதி முதலமைச்சராக்கப்பட்டார். இதனை எம்ஜிஆரும் ஏற்றுக்கொண்டார்.
கட்சியிலிருந்து எம்ஜிஆர் நீக்கம்
இது குறித்த தெளிவான விளக்கத்தை சமூகவியல் ஆய்வாளர் பேராசிரியர் திருநாவுக்கரசு கூறுகையில், "1972ஆம் ஆண்டு வரை திமுக கட்சியில் கருணாநிதிக்கும், எம்ஜிஆருக்கும் ஒரு நல்ல உறவு இருந்துவந்தது. பிறகு இருவருக்கும் உள்கட்சி பூசல் வந்ததது.
இதனால் கருணாநிதி, ‘கட்சியின் வளர்ச்சி குறித்து தன்னை எம்ஜிஆர் பகிரங்கமாக குற்றஞ்சாட்டுகிறார்’ எனக் கூறி எம்ஜிஆரை கட்சியிலிருந்து அக்டோபர் 10, 1972ஆம் ஆண்டு தற்காலிகமாக நீக்கினார். பின்னர், நான்கு நாள்களுக்குப் பிறகு அக்டோபர் 14ஆம் தேதியன்று எம்ஜிஆர் நிரந்தரமாக நீக்கப்பட்டார். இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திமுகவிலிருந்து எம்ஜிஆரை வெளியில் கொண்டுவர இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் குறிப்பாக மறைந்த முன்னாள் செயலாளர் கல்யாண சுந்தரத்தின் பங்கு அதிகம் எனக் கூறப்படுகிறது. ’திமுக ஒரு இனவாத கட்சி. அந்தக் கட்சியை உடைத்ததில் பெருமிதம் கொள்கிறேன்’ என உள்கட்சி கூட்டங்களில் கல்யாண சுந்தரம் கூறியிருக்கிறார்” எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்பு
தொடர்ந்து பேசிய அவர் “அப்போது மத்தியில் இந்திரா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆண்டது. தமிழ்நாட்டிலுள்ள காங்கிரஸ் தலைவர்கள் குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் காமராஜ் உள்ளிட்ட மற்ற நிர்வாகிகள் இந்திரா காந்தியை எதிர்த்து வந்தனர். இந்த நேரத்தில் தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் குறிப்பாக மோகன் குமாரமங்கலம், மற்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
அப்போது தான் எம்ஜிஆரின் மக்கள் செல்வாக்கை உணர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்கள், எம்ஜிஆரை டெல்லி அழைத்துச் சென்று இந்திரா காந்திக்கு அறிமுகப்படுத்தினர். இதனையடுத்து இந்திராவின் ஆதரவும் எம்ஜிஆருக்கு கிடைத்தது. இதனால், எம்ஜிஆரும் கட்சி தொடங்குவதற்கான பணிகளை மேற்கொண்டார்” என்றார்.