தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அதிமுக நியூட்ரினோ திட்டத்தை கைவிட மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் - ஸ்டாலின் - முதலமைச்சர் பழனிசாமி

சென்னை: முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சேர்ந்து நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்

By

Published : Jul 12, 2019, 11:19 PM IST

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்திருப்பது, தமிழ்நாடு மக்களுக்கும் குறிப்பாக தேனி மக்களுக்கும் அதிர்ச்சியளிக்கிறது. தேனி மாவட்ட மக்களின் எதிர்ப்பை மீறி, உயர் நீதிமன்றத்திலும், பசுமைத் தீர்ப்பாயத்திலும் இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மத்திய அரசு தன்னிச்சையாக இது போன்ற முடிவினை எடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

திமுக ஆட்சியில் இத்திட்டம் பற்றி தேனி மாவட்ட மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்ட நிலையில், மக்களின் எதிர்ப்பினை கவனத்தில் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கவில்லை. இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக அரசு அமைந்தவுடன், இந்த நியூட்ரினோ திட்டத்திற்கு 25 ஹெக்டேர் நிலத்தினை 3.10.2011 அன்று வழங்கியது. பிறகு வனப்பகுதியில் உள்ள நிலங்கள் 4.62 ஹெக்டேரை அதிமுக 14.11.2011 அன்று வழங்கியது. முல்லைப் பெரியாறு, மேற்கு மலைத் தொடர்ச்சி ஆகியவற்றிற்கு அருகில் நியூட்ரினோ திட்டத்தை அனுமதித்து, சுற்றுப்புறச்சூழல், வன விலங்குகள், வனப்பகுதி வாழ் மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவது கண்டனத்திற்குரியது.

தற்போதுள்ள அதிமுக அரசு, இத்திட்டத்திற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதியையும், நகர்ப்புறத் துறை நியூட்ரினோ கட்டுமானத்திற்கான அனுமதியையும் வழங்கியுள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது. ஆகவே தேனி மாவட்டம் தேவாரம் அருகில் உள்ள பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் பணியை, தமிழ்நாடு மக்களின் பாதுகாப்பு கருதி மத்திய பாஜக அரசு கைவிடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

முதலமைச்சர் பழனிசாமியும், தேனித் தொகுதியிலிருந்து துணை முதலமைச்சராகியுள்ள ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் இந்தத் திட்டத்திற்கு எதிராக உரிய அழுத்தம் கொடுத்து, மத்திய அரசை இத்திட்டத்தை கைவிட வைக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்' என கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details