சட்டவிரோத பேனர் வைத்தது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, சுபஸ்ரீ மரணம் தொடர்பாக சிறப்புப் புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சுபஸ்ரீ தந்தை ரவி தொடர்ந்த வழக்கு உள்ளிட்ட வழக்குகள் இன்று நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கின் விசாரணை அறிக்கையை காவல் துறையினர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், பள்ளிக்கரணையில் அனுமதியில்லாமல் பேனர் வைத்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சுபஸ்ரீ மரண வழக்கின் இறுதி அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல, கட்சி நிகழ்ச்சிகளுக்கு பேனர் வைக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தி திமுக தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தது. தற்போது ஒருமாதம் கழித்து இன்று பேனர் வைக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தியிருப்பதாக அதிமுக தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.