தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதுதவிர, கட்சி சார்ந்த விளம்பரங்கள் உள்ளிட்டவற்றை தொலைக்காட்சி, சமூக வலைதளங்களில் ஆகியவற்றிலும் கட்சியினர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுகவின் தொழில்நுட்ப பிரிவு சார்பில், அதன் நிர்வாகி பசீர் அகமது தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
”திமுகவினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கருத்தில் கொள்ளாமல், அவர்களின் கட்சி சார்ந்த ஊடகங்களில் ஜாதி, மத பெயர்களை கூறி வாக்கு சேகரித்துவருகின்றனர். மேலும் தேர்தல் நடக்கவுள்ள சமயத்தில் திரைப்படங்கள் மற்றும் கட்சி சார்ந்த விளம்பரங்களை அவர்களுக்கு சொந்தமான ஊடகங்களில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர்.
அதிமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி பசீர் அகமது திமுகவினர் இதுபோன்று செயல்படுவது, தேர்தல் ஆணையத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரண்பாடானது. எனவே இது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என அதில் குறிப்பிட்டிருந்தார்.