திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் என்.பி. நட்ராஜ் போட்டியிடுகிறார். அவர் தனது உறவினர்களுக்குச் சொந்தமான மூன்று மருத்துவமனைகளில் இலவச மருத்துவச் சிகிச்சை வழங்குவதாகக் கூறி, வாக்குச் சேகரித்துவருகிறார் என சுயேச்சை வேட்பாளர் கே. ஜெயராஜ் என்பவர் தேர்தல் ஆணையம், அத்தொகுதியின் தேர்தல் அலுவலர் ஆகியோருக்குப் புகார் மனு அனுப்பியுள்ளார்.
அந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தும் மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் ஜெயராஜ் மனு கொடுத்திருப்பதாகவும், அந்த மனுவைப் பெற்று பரிசீலிக்கப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.