மறைந்த ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் காந்தி உருவப்படத்தைத் திறந்து வைத்தபின், காணொலி வாயிலாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ விவசாயிகளுக்கு விரோதமான மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசுக்கு கும்பிடு போட்டு ஆதரவு தெரிவித்தார் முதலமைச்சர் பழனிசாமி. பஞ்சாப் மாநிலத்தில் குறைந்தபட்ச ஆதார விலைக்குக்கீழ் நெல் வாங்க தடை போட்டு சட்டம் நிறைவேற்றியிருக்கிறார்கள். அப்படி ஒப்பந்தம் போடும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று கூறுகிறது அச்சட்டம். அந்த தைரியம் பழனிசாமிக்கு உண்டா?
கொஞ்சம்கூட மனசாட்சி இன்றி வேளாண் சட்டங்களுக்கு ஓட்டுப் போட்டுவிட்டு, இன்றைக்கு மாட்டு வண்டி ஓட்டி விவசாயிகளை ஏமாற்றுகிறார். விவசாயிகளின் நெல்லைக்கூட கொள்முதல் செய்ய பழனிசாமிக்கு மனமில்லை. போதிய நேரடிக் கொள்முதல் நிலையங்களை ஏற்படுத்தவில்லை. 1000 மூட்டை நெல்லுக்கு மேல் கொள்முதல் செய்ய முடியாது என்று கைவிரிக்கிறார். அதை செய்யக்கூட கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி தவிக்கின்றனர். விவசாயிகள் வாங்கிய கடன்களை ரத்து செய்ய உயர் நீதிமன்றமே உத்தரவிட்ட பின்னும், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்கு சென்று விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என்றவர்தான் இந்த பழனிசாமி. முடிந்தால், நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான உத்தரவாதம் அளிக்காத வேளாண் சட்டங்களுக்கு தமிழகத்தில் இடமில்லை என்று சொல்லுங்கள். அதை செய்துவிட்டு மாட்டு வண்டியில் ஏறி விவசாயி வேடம் போடுங்கள்.