சென்னை: தலைமைச் செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் உயர் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
கூட்டத்தில், ஆதி திராவிடர்களுக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள், வங்கிகளில் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஆதி திராவிடர்களுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் , ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கான சிறப்பு சுய வேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் முழு மானியத் திட்டங்கள், திறன் மேம்பாட்டு பயிற்சிகள் ஆகியவற்றை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
பழங்குடியினர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம், தேசியதுப்புரவுத் தொழிலாளர்கள், நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம், தேசியப் பட்டியலினத்தோர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம், தமிழ் நாடு முழுவதும் தாட்கோ மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் விடுதிகள், அலுவலகக் கட்டடங்கள், நபார்டு திட்டப்பணிகள் போன்ற கட்டுமானப் பணிகள் குறித்தும் அவற்றின் முன்னேற்றம் குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்தார்.